குறங்கை இவளுக்கு பிடிக்கும்!
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்... கோதை என்றால் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுபவள் என்று பொருள். அவளுக்கு ஆண்டாள் என்பது இன்னொரு பெயர். யாரை அவள் ஆண்டாள்? அந்த பரமாத்மாவான திருமாலையே ஆண்டாள். அவளது நட்சத்திரம் பூரம். ராசி சிம்மம். சிம்ம ராசிக்காரர்கள் தைரியசாலிகள் என்பது என்பது பொதுவான கருத்து. இந்த பூவுலகில் சாதாரணமாய் வந்து பிறந்த சிம்ம ராசியினருக்கே இப்படி ஒரு தைரியம் என்றால், தெய்வப்பிறப்பான ஆண்டாளின் தைரியம் எப்படி இருக்கும்? அந்த தைரியம் பிடிவாதமாக மாறியது.ஆனால், நம்மைப் போல் அவள் தேவைஇல்லாமல் பிடிவாதம் செய்யவில்லை. எது வேண்டுமோ அதைப் பிடிக்க பிடிவாதமாக இருந்தாள். அந்தக் கண்ணனின் திருவடியை அடைந்தே தீருவேன் என்பது அவள் எடுத்த சபதம். அதை பிடிவாதமாக நிறைவேற்றியும் காட்டினாள்.எதற்காக கண்ணன் மீது அவளுக்கு காதல்... வீரர்களை பெண்கள் விரும்புவார்கள். கண்ணன் மாபெரும் வீரனல்லவா!அவளது வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பாடும் ஒரு பாட்டில்,குறங்கு களை வந்து காணீரேகுவிமுலையீர் வந்து காணீரே! என்கிறார்.நமக்கு குரங்குகளைத் தான் தெரியும். ஆனால், வல்லின ற சேர்த்த குறங்கை தெரியுமா? குறங்கு என்றால் தொடை என்று அர்த்தம்.அழகிய மார்புகளை உடைய பெண்களே! கண்ணன் பிறந்திருக்கிறான். அந்தக் குழந்தையின் களையான தொடைகளைக் காண விரைந்து வாருங்கள், என்று அவர் அழைக்கிறார். வீரர்கள் தொடை தட்டி தங்கள் வீரத்தை வெளிக்காட்டுவார்கள். அன்பை வெளிக்காட்டுவதும் தொடையே. லட்சுமியை மடியில் வைத்தவன் திருமால். ஆம்... அது அன்பின் வெளிப்பாடு. இரண்யனை தன் தொடை மீது வைத்து தான் கொன்றார். அந்தத் தொடையில் நரசிம்மனின் வீரத்தைக் காண்கிறார் பெரியாழ்வார். அவரது செல்ல மகளான ஆண்டாளும் அந்த மாவீரனை விரும்பினாள்.திருப்பாவையில் ஆண்டாள் புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் என்று பாடுவாள்.புள் என்றால் கருடன். கருடன் குடி கொண்டிருக்கும் கோவில் ஸ்ரீவில்லிபுத்துõர். ஆண்டாள்-ரங்கமன்னார் அருகில் அவர் இருக்கிறார். பெரியாழ்வாரையும் கருடனின் அவதாரம் என்பர். ஆக, தந்தையையும் அவள் உடன் இருத்திக் கொண்டாள். அந்தத் தந்தைக்கு மகள் சேர்த்த பெருமை அளப்பரியது. இறைவனையே மணாளனாக அடைந்த அழியா வாழ்வு பெற்றாள். நம்மையும் அழியாமல் காக்கிறாள்.