உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூடப்பட்டது சதுரகிரி மலைப்பாதை!

மூடப்பட்டது சதுரகிரி மலைப்பாதை!

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நடந்த ஆடி அமாவாசை விழா நேற்றுடன் முடிந்தது. மாலை 5மணியுடன் மலைப்பாதை மூடப்பட்டது.சதுரகிரி மலையில் மே மாதம் நடந்த வெள்ளப்பெருக்கு காரணமாக மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் சென்றுவர தலா மூன்று நாட்கள் வீதம் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆடி அமாவாசை விழா ஆக., 12ல் பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. இதற்காக ஆக., 8 முதல் மலைப்பாதை திறக்கப்பட்டது. அன்று முதல் 11 நாட்களுக்கு அனுமதி வழங்கினர். இதை பயன்படுத்தி தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் மலைக்கு வந்தனர். கோயில் நிர்வாகமும் பக்தர்கள் வசதிக்காக 10 நாட்களுக்கு அமாவாசை வழிபாட்டை நடத்தியது. அமாவாசை பிறகும், பக்தர்களுக்காக சுவாமிகளுக்கு அமாவாசை அலங்காரம், பூஜைகளும் நேற்று (ஆக.,18) வரை நடந்தது. நேற்று இரவு 7 மணிக்கு அர்த்தஜாம பூஜையுடன் பக்தர்களுக்கான தரிசனம் நிறைவடைந்து கோயில் நடையும் சாத்தப்பட்டது. இதற்கு முன்னதாக மலை அடிவாரமான தாணிப்பாறையில் மாலை 5 மணியுடன் மலைப்பாதை மூடப்பட்டது. அதன்பின் மலைக்கு செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. மலைக்கு சென்ற பக்தர்கள் கீழே இறங்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

கலெக்டர்களுக்கு சபாஷ்:
ஆடிஅமாவாசை விழாவில் நெரிசல், தகராறு, தண்ணீர் பற்றாக்குறை என ஏதாவது பிரச்னைகள் ஏற்படும். ஆனால் இம்முறை பிரச்னைகள் ஏதும் இன்றி சுமுகமாக விழா முடிவடைந்தது. கலெக்டர்கள் சுப்பிரமணியம்( மதுரை) ராஜாராமன்(விருதுநகர்) எஸ்.பி.,க்கள்விஜயேந்திரபிதாரி ( மதுரை) மகேஷ்வரன் (விருதுநகர்) ஆகியோருக்கு பக்தர்கள் இடையே பாராட்டு கிடைத்துள்ளது.இவர்கள் விழாவை நடத்துவதில் காட்டிய அக்கறை, அவர்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள், அடிமட்ட பணியாளர்கள் வரை அனைவரையும் முழுமையாக ஒருங்கிணைத்து செயல்பட வைத்தது. இவர்கள் விழா நடைபெறுவதற்கு ஒருமாதத்திற்கு முன்பே கூட்டம் நடத்தி, அடிக்கடி தாணிப்பாறை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இதனால் பக்தர்கள் எக்குறைபாடும் இன்றி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !