வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் பெரிய சப்பர பவனி!
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்றிரவு, பெரிய சப்பர பவனி நடந்தது. நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழை நாடுகளின் லுார்து என அழைக்கப்படும், ஆரோக்கிய மாதா தேவாலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், ஆகஸ்ட் 29ம் தேதி துவங்கி, செப்., 8 வரை விழா கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி, நடப்பாண்டுக்கான விழா விமரிசையாக நடந்து வருகிறது. தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், 20 பாதிரியார்கள் பங்கேற்ற, கூட்டுப்பாடல் திருப்பலியும், தொடர்ந்து பெரிய சப்பர பவனியும் நேற்றிரவு நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு, தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, பேராலய வளாகத்தில் ஏற்றப்பட்டிருக்கும் மாதாவின் உருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில், இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.