17 ஆண்டுக்கு பின்.. காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!
காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நாளை காலை 9:30 முதல் 10 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.சிவகங்கை, காளையார்கோவிலில் மூன்று சிவாலயங்கள் ஒருங்கே இணைந்தது என்ற சிறப்பு பெற்ற மும்மூர்த்தி ஸ்தலம் சொர்ணகாளீஸ்வரர் கோயில். இக்கோயிலில் 17 ஆண்டுக்கு பின் நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட 34 குண்டங்களில் யாகசாலை பூஜை சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். திருமறை, திருமுறை பாராயணமும் நடக்கிறது.
கும்பாபிஷேகம்: நாளை (செப்.,9) காலை 4:30 மணிக்கு ஆறாம் கால யாகசாலையுடன் கும்பாபிஷேக பூஜை துவங்குகிறது. காலை 6:30 மணிக்கு பரிவார மூர்த்திகள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடும்; காலை 10 மணிக்கு மேல் இரட்டை ராஜகோபுரம், சொர்ணகாளீஸ்வரர் சமேத சொர்ணவல்லி,சோமேஸ்வரர் சமேத சவுந்திரநாயகி, சுந்தரேஸ்வரர் சமேத மீனாட்சியம்மன் ஆலய கோபுர கலசங்களில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் சிவஸ்ரீ ராஜாபட்டர் ஆகியோர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்துகின்றனர். மின்தெளிப்பான் மூலம் ராஜகோபுரத்தை சுற்றி நிற்கும் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட உள்ளது. 20க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஸ்தானிகர் காளீஸ்வர குருக்கள், அறநிலைய அதிகாரிகள், சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகள் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.