ஆதிநாராயண பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம்
கோபாலபுரம்: ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஆதிநாராயண பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம், இன்று நடக்கிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, கோபாலபுரம் (மூங்கிலேரி) கிராமத்தில், ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஆதிநாராயண பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், ஆறு மாதங்களாக நடந்து வந்தன. கிராமத்தின் வடக்கே, அடர்ந்த மாந்தோப்பின் நடுவே, அமைதியான சூழலில் இந்த கோவில் உள்ளது. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று காலை 10:40 மணிக்கு, கோவில் கோபுரத்திற்கு சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடு களை சாகிராஜூ வகையறாக்கள், கோபாலபுரம் மற்றும் அபிராஜி கண்டிகையை சேர்ந்த பகுதிவாசிகள் மேற்கொண்டு உள்ளனர். இதற்கான யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, சுதர்சன பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை, முதல் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை, மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தன. இரவு 7:00 மணிக்கு, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இன்று, காலை 7:00 மணிக்கு, கோ பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, 10:00 மணிக்கு, மகா பூர்ணாஹூதி நடக்கிறது. அதை தொடர்ந்து 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. 10:40 மணிக்கு, கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, சம்ப்ரோக்ஷணம் செய்யப்படுகிறது. இதையடுத்து, மூலவருக்கு கலச அபிஷேகம் நடைபெறும். காலை 11:30 மணிக்கு, திருக்கல்யாணம் நடக்கிறது.