விநாயகர் சதுர்த்திக்கு தயாராகுது வேடசந்தூர் திருஷ்டி பூசணி
வேடசந்தூர்,:வேடசந்தூர் பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கண்திருஷ்டிக்கான "திருஷ்டி பூசணிக்காய் அதிகளவு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விளைவிக்கப்படும் பூசணிக்காய்களில் ஒன்று சாம்பல் பூசணி எனப்படும் திருஷ்டி பூசணி. இதில் சாம்பார், அல்வா, மோர் குழம்பு, கூட்டு உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகளை தயார் செய்கின்றனர். ஆனாலும் இதனையே கண் திருஷ்டி படாமல் காக்கும் ஒரு பொருளாகவும் பார்க்கின்றனர். புதிய வீடு கட்டும் இடங்களில் இதனை கட்டித் தொங்கவிடுகின்றனர். அது மட்டுமின்றி, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரும்பாலான இடங்களில், இந்த காயை கத்தியால் கீறி, செந்தூரம் இட்டு சாமி கும்பிட்டு, வீதியில் கொண்டு போய் வீசுவது வழக்கமாக உள்ளது. இதற்காக தற்போது இந்தக்காயின் தேவை அதிகரித்துள்ளது. இவற்றை ஒட்டன்சத்திரம், பழநி, தாராபுரம் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதியில் பல விவசாயிகள் இவற்றை பயிரிட்டுள்ளனர். சேனன்கோட்டை ராஜசேகர் கூறியதாவது: குறைந்த தண்ணீர் இருந்தாலே இதற்கு போதுமானது. ஒரு காய் 3 கிலோவில் இருந்து அதிக பட்சமாக பத்து கிலோ வரை உள்ளது. தற்போது கிலோ ரூ.7 என்ற அளவில் தான் விற்பனையாகிறது. கட்டுப்படியான விலை கிடைத்தால் போதும், என்றார்.