இறைச்சி தானத்துடன் பக்ரீத் கோலாகலம்: தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகை!
சென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நேற்று, தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகைகள் நடந்தன. ஒட்டகம், ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு, ஏழைகளுக்கு இறைச்சி தானம் செய்து, இஸ்லாமியர்கள், கோலாகலமாக கொண்டாடினர். இஸ்லாமியர்களின் ஈகைத் திருவிழாவான, பக்ரீத் பண்டிகை நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் மசூதிகள் மட்டுமின்றி, பொது இடங்களிலும் சிறப்புத் தொழுகைகள் நடந்தன. சென்னை, முத்தியால்பேட்டை, டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில், த.மு.மு.க., சார்பில், சிறப்புத் தொழுகை நடந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, ஏராளமானோர் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும், த.மு.மு.க., மூத்த தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பேசியதாவது:உலகம் முழுவதும், இறை துாதர்கள் இப்ராஹிம் மற்றும் இஸ்மாயிலின் உன்னத தியாகங்களை நினைவுகூரும் வகையில், இந்த தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. சொந்த விருப்பத்தை விட, இறைவனின் கட்டளை மேலானது என்பதை உணர்ந்து, விருப்பு, வெறுப்புக்களை ஒதுக்கி விட்டு, குடும்பம், சமூக ரீதியாக ஒற்றுமையாக வாழ வேண்டும்.
தியாகத் திருநாளில், மகாராஷ்டிரா அரசு, காளை மாடுகளை பலியிட தடை செய்யும் புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது, வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில், அதுபோன்ற பிரச்னைகள் இல்லை. அரசும், உயர் அதிகாரிகளும் பண்டிகையை சிறப்பாக கொண்டாட விரும்புகின்றனர். சில கீழ்மட்ட அதிகாரிகள், தேவையின்றி அலைகழிப்பு செய்யும் நிலை உள்ளது. இவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நாளில், நாட்டு மக்கள் அனைவரும், ஈகோவை தியாகம் செய்துவிட்டு, நாடு வளம்பெற, ஒற்றுமை தழைத்தோங்க உறுதி ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதில், த.மு.மு.க., மூத்த தலைவர் குன்னக்குடி அனிபா, துறைமுகம் பகுதி செயலர் எம்.இ.மீரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இஸ்லாமிக் சொ சைட்டி சார்பில், சென்னை தீவுத் திடலிலும், தவ்ஹீத் ஜமாத் சார்பில், மண்ணடி, தம்பு செட்டி தெருவிலும், சிறப்பு தொழுகைகள் நடந்தன. சென்னை, திருவல்லிக்கேணி, பெரியமேடு மசூதி உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடந்தன.இந்நாளில், ஏழைகளும் இறைச்சி உணவு உண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், ஒட்டகம், ஆடுகளை பலி கொடுத்து, அதில், ஒரு பகுதியை, ஏழைகளுக்கு கொடுத்து, இஸ்லாமியர்கள் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.