முயற்சி: கோவில்களில் தவில் வாசிக்கும் ஜப்பான் வித்வான்!
ஜோசியக்காரன் கையில் இருந்து உருண்டோடும் சோழிகளை போல, அவர் நாவில் இருந்து லாவகமாகவும், சரளமாகவும் உருண்டோடுகின்றன, தமிழ் வார்த்தைகள். 33 வயதாகும், ஹிதேனோரி இஷியிக்கு, தாய் மொழியிலோ, தந்தை வழியிலோ, தமிழ் தொடர்பு மொழி அல்ல என்பதை, அவரிடம் பேசியதில் இருந்து அறிய முடிந்தது. நம்மோடு மேலும் பகிர்ந்து கொண்ட ஹிதேனோரி இஷியி: தாய் மொழியை போற்றும் ஜப்பான் தான் என் தாயகம். கமுக்குரா என்பதே, நான் பிறந்த இடம். சிறுவயதிலேயே, தாள வாத்தியங்களில் ஒரு மயக்கம் உண்டு. தமிழுக்கும் எனக்குமான தொடர்பு காதலிக்கும் காதலனுக்கும் உள்ள தொடர்பு போல, எதிர்பாராமல் உண்டானது என, கண்களை மூடி, நினைவுகளை பின்னோக்கி ஓட விட்டு, ம்ம்... என, செருமியபடி தொடர்ந்தார். கடந்த 2006ல், நானும், என் நண்பன் யூத்தாவும் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தோம். டில்லி, ஆக்ரா, கோவா, மும்பை, எல்லோரா என, பல இடங்களுக்கு எங்களின் கால்கள் சுற்றின.
ஆர்வம் வந்தது எப்படி?: பார்த்த இடங்களில், அழகும், ஆச்சரியங்களும் எங்களை ஆட்கொண்டாலும், காசி தான் எங்கள் மனதை பிசைந்த இடம். அந்த மந்திர மண்ணில் கிளம்பிய பண்ணிசையில் நாங்கள் சொக்கிப் போனோம். சிதார், தபேலா இசைக்கருவிகளை மீட்டிய கலைஞர்களின் திறமையில் மயங்கினோம். நண்பன், சிதார் கற்கவும், நான், தபேலா கற்கவும் ஆசைப்பட்டோம். ஒரு தாள வாத்திய வி.சி.டி., வாங்கினோம். அதில், டும்... டும்... என்ற ஒலியுடன் முழங்கும் தபேலாவும், கும்... கும்... என முழங்கும் கஞ்சிராவும் சேர்ந்து என்னை என்னவோ செய்தது. கஞ்சிரா வாசித்தவர், செல்வகணேஷ், தவில் வாசித்தவர் தஞ்சை கோவிந்தராஜன் ஆகியோர், தமிழர்கள் என்பதை அறிந்தேன். அப்போது, எங்களின் சுற்றுலா, விசா முடிந்ததால், ஜப்பான் சென்றோம்.
ஒன்றரை ஆண்டுகள், ஒரு இயற்கை விளை பொருள் விற்பனை அங்காடியில் வேலை பார்த்து, பணம் திரட்டினேன். பெற்றோரிடம் அனுமதி பெற்று, 2008ல், மீண்டும் இந்தியா வந்தேன். நான் தேடிய நபர், சென்னை திருவல்லிக்கேணியில் இருப்பதாக அறிந்தேன். திருவல்லிக்கேணியில், அப்போது பொங்கல் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நான் ஒரு நிகழ்ச்சியை நேரடியாக பார்த்தேன். அதில், என் கனவில் வந்து போன, கஞ்சிராவை ஒருவர் அழகாக வாசித்தார். அவரிடம் சென்று, எனக்கும் கற்றுக் கொடுங்கள் என்றேன். அதன்படி, மடிப்பாக்கம் கோபாலகிருஷ்ணனிடம், ஆறு மாதங்கள் கஞ்சிரா பயிற்சி பெற்றேன். அந்த காலகட்டத்தில், திருவல்லிக்கேணியில் நடந்த ஒரு கச்சேரியில், திருவல்லிக்கேணி சேகர், அழகாக தவில் வாசித்துக்கொண்டிருந்தார். அதே நேரம், எனக்குள் தவில் கற்கும் ஆர்வத்தையும் துாண்டிக் கொண்டு இருந்தார். பின், அவரிடமும் தவில் கற்றேன்.
பின், ஜப்பான் சென்று, அங்குள்ள இசைக்குழுக்களுடன் இணைந்து தாளவாத்திய கருவிகளையும், கஞ்சிராவையும் வாசித்தேன். அதே நேரம், தஞ்சை கோவிந்தராஜனின் வாசிப்பு, எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. மீண்டும், தமிழகம் வந்தேன். தஞ்சை கோவிந்தராஜனை சந்தித்து, அவர் இசை ஆசிரியராக பணியாற்றிய திருவையாறு இசைக்கல்லுாரியில், தவில் இசை குறித்த இரண்டாண்டு பட்டய படிப்பில் சேர்ந்தேன். அவர் வீட்டிலேயே, என்னை தங்க வைத்து அரவணைத்தார். ஆனாலும், என் துரதிர்ஷ்டம், ஓராண்டு முடியும் போதே, அவர் ஓய்வு பெற்று விட்டார். படிப்பை முடிக்கும் தருவாயில், சக மாணவர்களுடன் வாசித்த போது, என் வாசிப்பு சரியில்லை என, ஆசிரியரால் விமர்சிக்கப்பட்டேன். அதனால், விழா மேடைகளில் நான் நிராகரிக்கப்பட்டேன். ஜப்பான் சென்றேன். வீட்டில் திருமணம் செய்து கொள்ள சொன்னார்கள். நான், இந்தியா சென்று, தவில் வாசிப்பை மேலும் கற்க வேண்டும் என்றேன். வீட்டில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், என் உறுதியான முடிவு தான் வென்றது.
வேட்டி, துண்டு பிடிக்கும்: மீண்டும், இந்தியா வந்தேன். அண்ணாமலை பல்கலையில், மூன்றாண்டு தவில் இசை பட்டப்படிப்பில் சேர்ந்தேன்; முடித்தேன். தொடர்ந்து, தமிழகத்தின் பெரும்பாலான கோவில்கள், திருமணங்களில் தவில் வாசித்து வருகிறேன் ஆனாலும், தனி ஆவர்த்தனம் செய்யும் அளவுக்கு, என்னால் கீர்த்தனைகளை சிறப்பாக செய்ய முடிய வில்லை என்பது எனக்கு தெரிகிறது. அதிக நேரம் பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும் என நினைக்கிறேன். இசையோடு இசைந்தால் தான், இசை பெருமையை தரும் என்பது எனக்கு தெரியும். ஆனாலும், தற்போது, சென்னையில் உள்ள ஜப்பான் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதால், முழுமையாக, பயிற்சியில் ஈடுபட முடியவில்லை எனக்கு, வேட்டி, துண்டு அணிவது மிகவும் பிடிக்கும்; இங்குள்ள உணவு வகைகள் மிகவும் பிடிக்கும்.
தமிழகத்தில் எனக்கு தவில் இசை பிடித்து போனது போல், தஞ்சையின் நெல் வயல்களையும், பண்பாடும், பாசமும் மாறா தமிழ் பெண்களையும் மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில், நெல் விவசாயம் செய்ய, தஞ்சையில் ஒரு வயலும், என் வாழ்க்கை துணையாக ஒரு தமிழ் பெண்ணும் வந்தால் நன்றாக இருக்கும் என்பது என் சமீபத்திய ஆசை! என்று, முறுவலித்த போது, ஹிதேனோரி இஷியின் முகத்தில் புது வண்ணம் குழைந்தது.