28 பதவிகளுக்கு, 75 பேர் போட்டி; ஐயப்பன் கோவிலில் தேர்தல்!
திருப்பூர் : பழமைவாய்ந்த, திருப்பூர் ஐயப்பன் கோவில் நிர்வாக குழு தேர்தல், இன்று நடக்கிறது; தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட, 28 பதவிகளுக்கு, 75 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்; குலுக்கல் முறையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சபரிமலைக்கு, 1960ல் சென்று வந்த பெரியோர்களால், திருப்பூரில் ஸ்ரீஐயப்ப பக்த ஜன Œங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்தின் பெரும்முயற்சி யால், 1977ல் காலேஜ் ரோட்டில், ஐயப்பன் கோவில் உருவாக்கப்பட்டது. சங்கத்தில், 500 உறுப்பினர்கள் உள்ளனர். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போதுள்ள நிர்வாக குழு பதவி காலம், இம்மாதத்துடன் நிறைவடைகிறது.இதையடுத்து, தலைவர், துணை தலைவர், பொது செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் மற்றும், 23 நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் என, 28 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தல் அதிகாரியாக வக்கீல் சொக்கலிங்கம் செயல்படுகிறார். நேற்று மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள, 28 பதவிகளுக்கு, 75 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
தலைவர் பதவிக்கு, மணிகண்டன், மணி சங்கர், வரதராஜன், ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோர், துணை தலைவர் பதவிக்கு, ஞானசேகரன், ரகுபதி, ஈஸ்வரமூர்த்தி, முத்து, துரைராஜ், சுகுமார், சுனில்குமார், கோபால்சாமி ஆகிய எட்டு பேர், பொது செயலாளர் பதவிக்கு, மணி, சிவக்குமார், நாச்சிமுத்து, ராமகிருஷ்ணன், சந்திரசேகர் ஆகிய ஐந்து பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.பொருளாளர் பதவிக்கு, ஈஸ்வரமூர்த்தி, ராமசாமி, முருகேசன், பொன்னுதுரை, அப்புசாமி ஆகியோரும், இணை செயலாளர் பதவிக்கு 10 பேரும், 23 நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் பதவிக்கு, 41 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று காலை, 10:30 மணிக்கு, ஆண்டு மகா சபை கூட்டம் நடைபெறுகிறது. மதியம், 2:00 மணிக்கு, வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் பெயர் எழுதப்பட்டு, குலுக்கல் முறையில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர்.