கொடைக்கானலில் விநாயகர் சிலை ஊர்வலம்!
கொடைக்கானல்: கொடைக்கானல் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதற்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் குமரன் தலைமை வகித்தார். நகர தலைவர் கார்த்திக் வரவேற்றார். மாநில செயலாளர் ரவிபாலன் உட்பட பலர் பங்கேற்றனர். தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது: கொடைக்கானலில் மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதால் பசுமை இழந்து காணப்படுகின்றது. கடத்துவோர் மீது நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்து சேவை அறக்கட்டளை சார்பில் அடுத்த ஆண்டு 2 லட்சம் மரக்கன்றுகள் வைத்து வளர்க்கப்படும். கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்களை ஒடுக்க வேண்டும். கொடைக்கானலில் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும் கட்டப்படும் கட்டடங்களை தடுக்க வேண்டும். சிறைக்காவலர்கள் தாக்கப்பட்டதால் சிறைச்சாலை, போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை அளிக்க உள்ளோம், என்றார்.