அதிக வருமானம் உள்ளவரா?
உங்களுக்கு வருமானம் அதிகமாக இருக்கலாம். இதில் தேவை போக மீதியை எதற்கு செலவழிக்க வேண்டும் என நபிகள் நாயகம் கூறியுள்ளதாவது. நீ தேவைக்கு அதிகமான உனது செல்வத்தை ஏழ்மையில் வாடும் இறையடியார்களுக்காகவும், மார்க்கப் பணிகளுக்காகவும் செலவிடு. அதுவே உனக்கு நன்மை தரும். தேவைக்கு அதிகமான செல்வத்தை தேவையுடையவர்களுக்காக நீ செலவிடாவிட்டால் இறுதியில் அது உனக்கு தீங்கு பயக்கும். உன்னிடம் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு மட்டுமே செல்வம் இருக்கின்றது என்றால், அதிலிருந்து நீ செலவிடாவிட்டால், அதற்காக அல்லாஹ் உன்னைக் கண்டிக்க மாட்டான். நீ எவருக்குப் பொறுப்பாளியாய் இருக்கிறாயோ, அவர்களிலிருந்து தர்மம் செய்யத் தொடங்கு, என்றார்.அவர் மேலும், நீ தேவையுள்ள என்னுடைய அடியார்களுக்காகவும் மார்க்கப் பணியை வளர்ச்சி பெறச் செய்வதற்காகவும் செலவிட்டால், நான் உனக்காகச் செலவு செய்வேன் என்று எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான், என்றார்.இதில் உனக்காகச் செலவு செய்வேன் என்பதன் அர்த்தம் தெரியுமா!மனிதன் தன் சம்பாத்தியத்திலிருந்து பிற மக்களின் தேவைகளுக்காகவும், மார்க்கப் பணிகளுக்காகவும் செலவிடுகின்ற செல்வம் எதுவாயினும் அது வீணாகி விடுவது இல்லை. மாறாக, அவன் அதற்கான கூலியை மறுஉலகத்திலும் பெற்றுக் கொள்வான், இவ்வுலகிலும் பெற்றுக் கொள்வான். உலகில் அவனது செல்வத்தில் செழிப்பும், வளமும் உண்டாகும். மறுமையில் அவன் கூலியாகப் பெறுவது எதுவாயினும் அதன் அளவை இங்கே மதிப்பிட்டு விட முடியாது என்பதாகும். அபூதர் (ரலி) என்பவர் ஒருமுறை நபிகள் நாயகம் முன் சென்றார். அப்போது நாயகம், அவர்கள் அழிந்து போய் விட்டார்கள் என்று கூறினார். அதற்கு அபூதர் (ரலி) யார் அழிந்து போய் விட்டார்கள்? என கேட்டார்.அதற்கு அண்ணலார், செல்வந்தர்களாய் இருந்தும் செலவழிக்காமல் இருப்பவர்கள் அழிந்து போய் விட்டார்கள். முன்னால் இருப்பவர்களுக்கும், பின்னால் இருப்பவர்களுக்கும், வலதுபக்கம் இருப்பவர்களுக்கும், அனைவருக்கும் செல்வத்தை அள்ளித் தருபவர்கள் வெற்றியடைந்தவர்கள் ஆவர். ஆனால், இப்படிச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். என்றார்.