கம்பராமாயணம் திருத்தப்பட்ட அளவிற்கு திருக்குறள் திருத்தப்படவில்லை!
தரமணி: பதிப்பாளர்களால் கம்பராமாயணம் திருத்தப்பட்ட அளவிற்கு திருக்குறள் திருத்தப்படவில்லை என, கருத்தரங்கில் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தரமணி ரோஜா முத்தையா நுாலகத்தில், பேராசிரியர் வீ.அரசு மணிவிழா அறக்கட்டளை சார்பில், அறியப்படாத தமிழ் நுாற்பதிப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், பாரதப் பதிவுகள் குறித்து இரா.சீனிவாசன், கம்பராமாயணப் பதிவுகள் குறித்து அ.சதீஷ், தேவாரப்பதிவுகள் குறித்து, அ.மோகனா, பெரியபுராண பதிவுகள் குறித்து இரா.கமலக்கண்ணன், திவ்ய பிரபந்த பதிவுகள் குறித்து, க.அறிவுக்கரசு, திருமந்திர பதிப்புகள் குறித்து க.காமராஜன், புறநானுாற்றில் செவ்வியல் நுாற்பதிப்பு முறைமை குறித்து, வேணுகோபால் ஆகியோர் பேசினர்.
அதில் அவர்கள் பேசியதாவது: கடந்த, 19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் அச்சுக்கலையின் வளர்ச்சி துவங்கியது. கிறிஸ்தவர்களின் ஆதிக்கம், மதமாற்றம் உள்ளிட்டவற்றை எதிர்ப்பதற்காக, படித்தவர்கள் என்று அறியப்பட்ட தமிழறிஞர்கள், மடாதிபதிகள், புரவலர்கள் உள்ளிட்டோர், தமிழின் தொன்மையான ஓலைச்சுவடிகளை பதிப்பிக்கும் பணியில் இறங்கினர். அப்போது மேலோங்கிய சைவ, வைணவ பற்றாளர்களின் மாறுபட்ட கருத்துக்களின் வாயிலாக, மூல நுால்களில் பல்வேறு மாற்றங்கள் செய்து, பதிப்பிப்ப தும் நடந்தது. அந்த வகையில், கம்பராமாயணத்தில், வால்மீகி சொல்லாமல் விட்ட பகுதிகளை, தாங்களே இட்டு நிரப்பினர். தமக்கு ஆட்சேபமான பகுதிகளை நீக்கி விட்டு, அவற்றிற்கு இணையான தம் சொந்த கருத்துக்களை யும் பதிவு செய்தனர். அதே போல், பல்வேறு வகைகளில், கம்பராமாயணம் மாற்றங்களுக்குட்பட்டு திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், திருக்குறள் அவ்வாறு திருத்தப்படவில்லை. காரணம், திருக்குறளின் யாப்பு மாறா கட்டமைப்பு; பல்வேறு உரையாசிரியர்களின் உரை ஆகிய காரணங்களை சொல்லலாம்.
ஆனால், கம்பராமாயணம், ஆந்திரா, கர்நாடகா, இலங்கை, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் பலவாறாக படியெடுக்கப்பட்டு, பாட வேறுபாடுகளுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தில் மட்டும், 350க்கும் மேற்பட்ட முதல் பதிப்புகளை காண முடிகிறது. கம்பராமாயணத்தை ஆய்வு ரீதியில் பதிப்பிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில், ஆர்.கே.சண்முகம் செட்டியார், வையாபுரி பிள்ளை, கந்தசாமி பிள்ளை ஆகியோருக்குள் பெரும் கருத்து முரண்கள் இருந்ததையும் உணர முடிகிறது. தேவாராப் பதிப்புகளை பொறுத்த வரை, அதை ஒரு பண்ணிசை நுாலாகவே பார்த்திருக்கின்றனர். அதில், தலம், பண் சார்ந்த பதிப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால், திருவாசகம் பதிப்பிக்கப்பட்ட அளவுக்கு தேவாரம் பதிப்பிக்கப்படவில்லை. அதே நேரம், காரைக்கால் அம்மையாரின் பாடல்களை முதலில் சேர்க்க என்ன காரணம் என்றும் தெரியவில்லை. வைணவக் கதையை சொல்லும் கம்பராமாயணத்துக்கு இணையாக, சைவ புராணம் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அதன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் வகையிலும், பெரியபுராணமும் அதன் விளக்க நுால்களும் பதிப்பிக்கப்பட்டன. அதேநேரம், பல்வேறு பதிப்புகள் குறித்தும், அவற்றை பதிப்பித்தோர் குறித்தும், பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர்கள் பேசினர்.