உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாராஜா போல மகிழ்ச்சியுடன் வாழ்க!

மகாராஜா போல மகிழ்ச்சியுடன் வாழ்க!

தேவைகளைப் பெருக்கிக் கொள்பவன் எங்கும் அலைந்து திரிவான். தேவையை முறைப்படுத்தி வாழ்பவன் மகாராஜா போல மகிழ்ச்சியுடன் வாழ்வான்.ஆரோக்கியமும், பொருளாதார பாதுகாப்பும் வாழ்வின் அடிப்படை தேவைகள்.  இவை  இருந்தும் கூட, தங்களுக்குத் தாங்களே பிரச்னை ஏற்படுத்துவது தேவையற்றது.யாரையும் எதற்காகவும் குறை கூறாதீர்கள். பிறருக்கு தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் யாருக்கும் வழங்கவில்லை. விரும்பிய முறையில் வாழ்வு நடத்தும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது.உங்கள் சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மற்றவற்றை கவனிக்க கடவுள் ஒருவர் இருக்கிறார். உங்களைக் கவனிப்பதும் அவரே என்ற உண்மையை மறக்காதீர்கள். எது உலகில் நடந்தாலும், அது கடவுளின் விருப்பத்தால் தான் நடக்கிறது. உங்கள் பார்வையில் வேண்டுமானால் ஒரு செயல் நல்லதாகவோ, கெட்டதாகவோ காட்சிஅளிக்கலாம். அமைதி சக்தி வாய்ந்த ஆயுதம். இக்கட்டான நேரத்தில் மனிதன் மனஅமைதி இழப்பது கூடாது. பொறுமையுடன் நிலைமையை எதிர்கொள்ளுங்கள். அதற்கான தீர்வு கண்முன்னே விரியத் தொடங்கும்.அனைவரிடமும் பணிவுடன் இருங்கள். எந்த நிலைமையிலும் அடக்கத்தை பின்பற்றுங்கள். உயர்ந்தவன் என்றோ, தாழ்ந்தவன் என்றோ யாரையும் தவறாக மதிப்பிடாதீர்கள்.பிறர் உங்களைக் குறை கூறும் போது மவுனமாக இருந்து விடுங்கள்.

இதுவும் கூட ஒரு வகை தவமே. கலக்கம் அடையாமல், பழியை ஏற்றுக் கொண்டால் ஆன்மிகப்பாதையில் நீங்கள் உயர்வடைவதாகப் பொருள். பெருமைக்காக எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாம். வெற்றியாளர்கள் யாரும் பிறரின் அங்கீகாரத்தை எதிர்பார்த்து செயலாற்றுவதில்லை. கடவுளின் ஆசிர்வாதத்தை மட்டும் நாடுங்கள். பிடித்தமான வேலை அல்லது பொழுது போக்கில் ஈடுபடுங்கள். பணத்தை மட்டும் எதிர்பார்த்து பணியாற்றுவது கூடாது. மனநிறைவும், நியாயமான வருமானமும் கொண்டதாக உள்ள பணியைத் தேர்ந்தெடுங்கள். பொறாமை என்னும் வியாதியில் சிக்கி விடாதீர்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா. ஒருவருடைய முன்னேற்றத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.அடிப்படைத் தேவைக்கு கூட பிறரை அண்டி இருக்காதீர்கள். சுதந்திரமாக வாழ்வதே மகிழ்ச்சிக்கான வழி. இளமையில் இருந்தே சுய காலில் நிற்கப் பழகுங்கள்.பொறுப்பில் இருந்து தப்பியோட நினைக்காதீர்கள். நான் செய்கிறேன் என்ற ஆணவமும் கூடாது. உங்களைக் கடவுளின் சேவகனாக எண்ணிச் செயல்படுங்கள்.தினமும் தியானம் செய்யுங்கள். இதனால் ஞாபக சக்தி, திறமை, மனவலிமை உண்டாகும். குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைத் திறம்படச் செய்யும் ஆற்றல் உண்டாகும்.தோல்வியில் கிடைத்த அனுபவ பாடத்தை மறக்காதீர்கள். குறைகளைத் திருத்திக் கொண்டால் அடுத்த முறை நிச்சயம் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை என்றால் லட்சிய நோக்கம் இருக்க வேண்டும். எதிர்ப்பு, தடைகளை முறியடிக்காமல் யாராலும் லட்சியத்தை அடைய முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !