உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி விரதம் இருக்கும் முஸ்லிம் இளைஞர்கள்!

நவராத்திரி விரதம் இருக்கும் முஸ்லிம் இளைஞர்கள்!

லக்னோ: வகுப்புவாத பதற்றம் காரணமாக நடக்கும் மோதல் சம்பவங்களுக்கு மத்தியில், நவராத்திரி விழாவுக்காக விரதம் இருக்கும், இரண்டு முஸ்லிம் இளைஞர்களின் முயற்சி, அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. உ.பி., மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, லக்னோ பல்கலைக்கழகத்தில் படிக்கும், சஹாதுத்தீன் அகமது உர்ப் சமீர் மற்றும் அப்துல் கலீம் என்ற இரு மாணவர்களும், இந்துக்கள் கொண்டாடும் நவராத்திரி விழாவிற்கு விரதம் இருக்கின்றனர். நவராத்திரி விழாவின், முதல் மற்றும் கடைசி நாளில், இந்துக்கள் விரதமிருப்பர். ஆனால், இந்த இளைஞர்கள், நவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். பல்கலை விடுதியில் தங்கியுள்ள இவர்கள், விரதத்திற்கு தேவையான பூஜை பொருட்கள், பழங்களை, இந்து மாணவர்கள் மூலம் வாங்கி வர செய்ததுடன், துர்கா சாலிசா என்னும் பதிகத்தை பாடி, பூஜை செய்கின்றனர். இதுகுறித்து இந்த மாணவர்கள் கூறியதாவது:நாட்டில் நிலவும் வகுப்புவாத பிரச்னைக்கு தீர்வு காண, இந்து பண்டிகைக்கு விரதம் இருக்கிறோம். நவராத்திரியை அடுத்து, தீபாவளி வருகிறது. அப்போது, இந்துக்களின் வீடுகளில் தீபம் ஏற்றுவர். தீபம் ஏற்ற வசதியில்லாதவர்களுக்கு உதவி செய்து, அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் காண திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !