தி.மலை தற்காலிக பஸ் ஸ்டாண்டில் மஹா தீபம் விழா நேரடி ஒளிபரப்பு!
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா, முதல் முறையாக, தற்காலிக பஸ்ஸ்டாண்டுகளில், மெகா ஸ்கிரீனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும், என கோவில் இணை ஆணையர் செந்தில் வேலவன் கூறினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் நவம்பர், 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நவம்பர், 25ம் தேதி, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படுகிறது. இதை காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 10லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர். பக்தர்களுக்கு அடிப்படை வசதி, பாதுகாப்பு,போக்குவரத்து, கோவிலினுள் தரிசனம் செய்ய வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு கார்த்திகை மஹா தீபத்தன்று, பவுர்ணமியும் வருவதால் தீப திருவிழாவை காண வழக்கமாக வரும் பக்தர்களை விட, இரு மடங்கு அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பக்தர்கள் வசதிக்காக நகரில், 9 தற்காலிக பஸ்ஸ்டாண்டுக்கள் அமைக்கப்படுகிறது. இதில் முக்கிய, 6 தற்காலிக பஸ் ஸ்டாண்டுகளில், மெகா ஸ்கிரீனில் மலை உச்சியில் ஏற்றப்படும் மஹா தீபமும், அதே நேரத்தில் கோவிலினுள் பஞ்ச மூர்த்திகள் நடன காட்சி மற்றும் அர்த்தநாரீஸ்வரரின் நடன காட்சியை காணும் வகையில், நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் வடக்கு கட்டை கோபுர கலையரங்கத்திலும், ஒரு மெகா ஸ்கிரீன் அமைக்கப்பட உள்ளதாக, கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் தெரிவித்துள்ளார்.