திருவண்ணாமலை தீப திருவிழாவில் கற்பூரம் விற்க தடை: கலெக்டர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தீப திருவிழாவின்போது கற்பூரம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா, வரும் நவம்பர், 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மஹா கார்த்திகை தீப திருவிழா, 25ம் தேதி நடக்கிறது. திருவிழாவையொட்டி, திருவண்ணாமலைக்கு, 20 லட்சம் பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் வருவர். கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்க, மாவட்ட நிர்வாகம் சில விதிமுறைகளை அறிவித்து, கட்டுப்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அன்னதானம் செய்ய விரும்புவோர், வரும், 5ம் தேதி முதல், 20ம் தேதி வரை வேலை நாட்களில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்( ஊராட்சிகள்) அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும். கிரிவலப்பாதையில் எக்காரணத்தை கொண்டும், உணவு சமைக்க கூடாது. அன்னதானம் வினியோகிக்க தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே வழங்க அனுமதி வழங்கப்படும். உணவுப்பொருள் தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டர்கள், விறகு அடுப்புகள், மண்ணெண்ணைய் அடுப்புகள் பயன்படுத்த, கண்டிப்பாக அனுமதி கிடையாது. கிரிவலப்பாதையில் உரிய அனுமதி வழங்கப்பட்ட பின்பே தற்காலிக கடைகள் அனுமதிக்கப்படும். அனுமதி பெறாத கடைகள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தீப திருவிழா நாட்களில் நகரிலும், கிரிவலப்பாதையிலும் கற்பூரம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.