உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் "அம்புவிடும் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது நவராத்திரி விழா

சதுரகிரியில் "அம்புவிடும் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது நவராத்திரி விழா

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த நவராத்திரி திருவிழா நேற்று "அம்புவிடும் நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது. இம்மலையில் வீற்றிருக்கும் ஒரே பெண் தெய்வமான ஆனந்தவல்லியம்மனுக்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு உருவம் கிடையாது. ஆண்டு முழுவதும் கோயிலில் வெறும் பீடம் மட்டும் காட்சியளிக்கும். பக்தர்கள் குமிழ் வடிவில் உள்ள பீடத்திற்குத்தான் மலர் செலுத்தியும், தீபம் ஏற்றியும் வழிபடுவார்கள். நவராத்திரி திருவிழாவின் போது மட்டும் ஒன்பது நாட்கள் உருவமாக எழுந்தருளி காட்சியளிப்பார். இறுதி நாளில் அம்மன் மகிசாஷ்வர அரக்கனை அம்பு எய்து அழித்த பின் மீண்டும் உருவம் கலைக்கப்பட்டு விடும். அம்மனை உருவ வடிவில் தரிசிப்பதற்காக திருவிழா நடைபெறும் ஒன்பது நாட்களும் ஏராளமான பக்தர்கள் மலைக்கு செல்வார்கள்.

அம்புவிடும் நிகழ்ச்சி: புகழ்பெற்ற இத்திருவிழா அக்.,13 ல் நள்ளிரவு 11 மணிக்கு காப்புக்கட்டு வைபவத்துடன் துவங்கியது. அம்மனுக்கு பயறு உள்ளிட்ட தானிங்கள், வடை உட்பட பதார்த்த வகைகள் படையல் இடப்பட்டும், தாயத்துகள், காப்புக்கயிறுகள் படைத்தும், மாலையில் கொலு பஜனையுடன் 9 நாட்கள் வழிபாடு செய்யப்பட்டது. பத்தாவது நாளான நேற்று அம்மன் மகிசாஷ்வர அரக்கனை அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்று வழிபாடு செய்தனர்.மதியம் 12.45 மணிக்கு கோயிலில் இருந்து அம்மன் மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் வெளியேறி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றார். வாழைமர உருவில் இருந்த மகிசாஷ்வர அரக்கனை அம்பு எய்து அழித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மீண்டும் அம்மன் கோயிலை சென்றடைந்தார். அங்கு உருவம் கலைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. படையல் வைத்து பூஜிக்கப்பட்ட பொருட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பெண்கள் முளைப்பாரியை ஆற்றில் கரைத்தனர். மலையில் முகாமிட்டிருந்த பக்தர்கள் கீழேஇறங்கி வருவதற்காக இன்று மலையின் நுழைவுவாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மூடப்படும். *அதுபோல வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் மகிஷஸ்வர அரக்கனை துர்க்கை அம்மன் அம்புஎய்து அழிக்கும் "மகிஷாசுரவதம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !