பைரவர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கால பைரவர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கர்நாடகா ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகா சமஸ்தானம் சார்பில், ராமேஸ்வரம் சன்னதி தெருவில் ஆதி சுஞ்சனகிரி சமஸ்தான கிளை மடம், கால பைரவர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக ராமநாதசுவாமி கோயிலில் 1008 வெள்ளி கலசத்தில் புனித நீர் அபிஷேகம்,"காசி கங்கா ஆரத்தி சேவா சமிதி சார்பில் சிறப்பு பூஜை, மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகியது. 4 கால யாகசாலை பூஜைகளுக்கு பின் நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. ஆதி சுஞ்சனகிரி மடம் நிர்மலானந்தநாத சுவாமிகள் முன்னிலையில் கால பைரவர் கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து புதிய கிளை மடத்தை கைலாச ஆசிரம பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திரபுரி சுவாமிகள் திறந்து வைத்தார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாராசாமி, ஆதி சுஞ்சனகிரி மடம் நிர்வாகி ராமசந்திரா, பா.ஜ., தேசிய பொதுகுழு உறுப்பினர் முரளீதரன், ரோட்டரி சங்க நிர்வாகி முருகன் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.