உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்து திங்கள் சுமந்தாளே... அவள் பெருமைப்பட வேண்டும்!

பத்து திங்கள் சுமந்தாளே... அவள் பெருமைப்பட வேண்டும்!

தன் மகன் மற்றவர்களால் அறிஞன் என்று போற்றப்பட்டால், அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியை விட ஒரு தாய் அதிகம் மகிழ்வாள். மனிதன் ஒரு பிறவியில் கற்ற படிப்பின் பயன், வாழ்க்கை முழுமைக்கும், ஏழேழு பிறவிக்கும் தொடர்ந்து வந்து தஞ்சம் அளிக்கும்.  அழியாத ஒரே செல்வம் கல்வி மட்டுமே. பொன், பொருள் போன்றவை மனிதனுக்கு வளம் சேர்க்கும் செல்வம் என்னும் தகுதியை தருவதில்லை.  படிக்க வேண்டியவற்றை சந்தேகம் இன்றி தெளிவாக கற்க வேண்டும். படித்த நல்ல விஷயங்களை வாழ்வில் பின்பற்றி நடக்க வேண்டும்.  எண், எழுத்து இரண்டும் உலகில் வாழும் மக்களுக்கு கண் போன்றவை. படித்தவனே உண்மையான கண்களைப் பெற்றவன். படிக்கும் வாய்ப்பிருந்தும், அதை தவற விட்டவன் முகத்திலுள்ள கண்கள் இரு புண்களுக்கு சமமானவையே.  படித்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தால், இனி இவரை என்று காண்போமோ? என்று வருந்தும் விதத்தில் பிரிவர். இதுவே படித்தவர்களின் குணமாகும். பணக்காரனின் முன், ஏழை பணிந்து நடப்பது போல, ஆசிரியரிடம் மாணவன் பணிவுடன் பாடம் கற்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இழிவாக வாழ நேரிடும்.  தோண்டும் அளவிற்கு ஏற்ப கிணற்றில் தண்ணீர் சுரக்கும். அது போல, மனிதன் எந்த அளவுக்கு படிக்கிறானோ, அந்த அளவுக்கு அறிவாளியாகத் திகழ்வான். படித்தவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகி விடும். எந்த ஊரும் சொந்த ஊராக மாறும். இப்படியிருக்க, மனிதர்கள் உயிர் பிரியும் வரை படிக்காமல் இருப்பது ஏனோ தெரியவில்லை. மனிதன் மகிழ்ச்சியாக வாழ உதவும் படிப்பு, உலகிலுள்ள மற்றவர்களும் மகிழ்ச்சியாக வாழ துணை புரியும். அதனால், படித்தவர்கள் கல்வியை மிகவும் விரும்புவர். படித்தவர்கள் முன்னிலையில், மவுனம் காக்கும் படிக்காதவர்களை, நல்லவர்கள் என்றே சொல்ல வேண்டும். படிக்காதவன் ஒரு பயனும் தராத உப்பு நிலத்திற்குச் சமம். அவனது உடலழகு மண் பொம்மைக்கு சமமானது. படித்தவன் வறுமையில் வாழ்ந்தால் கூட பிரச்னையில்லை. ஆனால், படிக்காதவன் பெற்றிருக்கும் செல்வம் அதிக துன்பத்தை உண்டாக்கும்.அறிவு தரும் நுõல்களை கற்றவரையும், ஒன்றும் படிக்காதவரையும் ஒப்பிட்டால், அந்த வேறுபாடு மனிதனுக்கும், விலங்குக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைப் போன்றது.  (மகான் திருவள்ளுவர்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !