அனைத்திலும் பெரிய பொய்!
நாம் ஒன்றைப் பார்க்கவே இல்லை. ஆனால், அதைப் பார்த்தேன், இதைப் பார்த்தேன் என்று பொய் சொல்கிறோம். இது மிகப்பெரிய தவறு என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். இதுபற்றி, அவர்கள் உதிர்க்கும் ஒரு பொன்மொழியைக் கேட்கிறீர்களா!தன் இரு கண்களும் பார்த்திராத ஒன்றை, தன் இரு கண்களுக்கும் காட்டுவது தான் அனைத்தையும் விடப் பெரிய பொய்யாகும்,.எவ்வளவு பொருள் பொதிந்த பொன்மொழி பாருங்கள். நீ பார்க்காத ஒன்றை, பார்த்ததாகச் சொல்லி, மற்றவர்களிடம் மட்டுமல்லாமல், உனக்கு நீயே பொய் சொல்லிக் கொள்கிறாய், என்ற தெளிவான பொருளை இந்தப் பொன்மொழி தருகிறது.ஒப்புக்கு கூட பொய் சொல்வதைக் கூட அண்ணலார் விரும்பவில்லை.அஸ்மா பின்த் உமைஸ்(ரலி) என்பவர்கள் இதுபற்றி ஒரு அருமையான தகவல் சொல்கிறார்கள்.அண்ணல் நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரை (புதுமணப்பெண்ணை) அழைத்துக் கொண்டு அண்ணலாரின் இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அண்ணலாரின் வீட்டை அடைந்தபொழுது, அண்ணலார் ஒரு பெரிய பால் குவளையை எடுத்து வந்தார்கள். அதிலிருந்த பாலை திருப்தியடையும் அளவிற்கு குடித்தார்கள். பின், தம் துணைவிக்குக் கொடுத்தார்கள். அந்த அம்மையாருக்கு பசியிருந்தும், எனக்கு விருப்பமில்லை என்று கூறினார்கள். அவர் ஒப்புக்கு பதிலளிப்பதைப் புரிந்துகொண்ட நாயகம்(ஸல்) அவர்கள்,நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே! என்றார்கள்.அவருக்கு பசியெடுக்கிறது. இருப்பினும் அவர் வெட்கத்தால் சங்கடப்படுகிறார் என்று அண்ணலார் எண்ணினார்கள். ஆனாலும், கூட ஒப்புக்காகச் சொல்லும் பொய்யில் இருந்து அவர்களைத் தடுத்தார்கள்.நாயகம் அவர்கள், மக்களுக்கு சொன்ன அறிவுரைகளில் மிகப்பெரிய விஷயம் பொய் சொல்வதில் இருந்து தடுத்தது என்று கூட சொல்லலாம். பொய்யை நம்பிக்கைத் துரோகம் என்று அவர்கள் சாடியிருக்கிறார்கள்.நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக் கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும், என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.பொய் சொல்வதை அறவே தவிர்த்து, இறைவனின் அன்புக்கு பாத்திரமாவோம்.