சபரிமலை சீசன் ஏற்பாடுகளுக்காக ஆறு மாநில அமைச்சர்கள் கூட்டம்
சபரிமலை: சபரிமலை மண்டல சீசன் ஏற்பாடுகளுக்காக ஆறு மாநில அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் இன்று திருவனந்தபுரத்தில் நடக்கிறது.சபரிமலையில் மண்டல சீசன் வரும் நவ.17-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக சபரிமலை நடை 16 மாலையில் திறக்கிறது. மண்டல சீசனில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு மரக்கூட்டத்தில் இருந்து சரங்குத்தி செல்லும் பாதையில் ஆறு கியூ காம்ப்ளக்ஸ் கூடுதலாக கட்டப்பட்டுள்ளது. பம்பையிலும், சன்னிதானத்திலும் கூடுதல் கழிவறைகள் திறக்கப்பட உள்ளன. கூடுதல் மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. நிலக்கல்லில் புதிதாக பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், இந்த மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் இன்று காலை பத்து மணிக்கு முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் திருவனந்தபுரத்தில் நடக்கிறது, இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி மற்றும் கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் வெளி மாநில பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள், பக்தர்கள் கடை பிடிக்க வேண்டிய வசதிகள், பாலிதீன் தடை போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது. பம்பையில் துணிகளை வீசினால் ஆறு ஆண்டு வரை சிறைத்தண்டனை என்று கேரள ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரசாரம் செய்வது பற்றி முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.