உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி வெங்கடாஜலபதி டில்லியில் முகாம்!

திருப்பதி வெங்கடாஜலபதி டில்லியில் முகாம்!

புதுடில்லி: ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துகளை கொண்ட, திருப்பதி வெங்கடாஜலபதி, முதல் முறையாக, திருமலையை விட்டு, டில்லியில் முகாமிட்டு உள்ளார். டில்லியிலுள்ள நேரு மைதானத்தில், நாளை மறுநாள் வரை, வைபவ உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை டில்லியில் நடத்தும்படி, ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் நிர்வாக டிரஸ்டியும், பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவின் மகளுமான தீபா வெங்கட், திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திடம் கோரினார். இந்நிகழ்ச்சிக்காக, நேரு மைதானத்தில், திருமலை கோவில் போன்று அமைக்கப்பட்டு, வெங்கடேச பெருமாளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பூஜைக்கு தேவையான பொருட்கள், 25 லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளன; 35 பட்டர்கள் உட்பட, 250 ஊழியர்கள் வந்துள்ளனர். அலங்காரம் மற்றும் பூஜைக்கு தேவையான மலர்கள், திருமலை மற்றும் பெங்களூரில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. திருமலையில், பெருமாளுக்கு நடத்தப்படும் நித்திய பூஜைகள், வாராந்திர பூஜைகள் மற்றும் சேவைகள் இங்கும் நடத்தப்பட உள்ளன. பூஜைக்கு வரும் பக்தர்கள் தரையிலும், சேர்களிலும் அமரும் வசதி செய்யப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் நடக்கும் சுவாமி புறப்பாட்டில், பக்தர்கள் கலந்து கொண்டு, அருகில் இருந்து தொட்டு கும்பிடலாம். பூஜைக்கு வரும் ஆண், பெண்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில், பெருமாளை அருகில் இருந்து தரிசிக்கவோ, தொடவோ பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நாளை நடக்கும் பூஜையில், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !