உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எண்கண் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்!

எண்கண் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்!

திருவாரூர்: திருவாரூர் அருகே,  எண்கண் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்தசஷ்டி விழா துவங்கியது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது எண்கண் கிராமம், இக்கிராமத்தில் சுப்ரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் பிரம்மபுரிஸ்வரர் கிழக்கு நோக்கியும், சுப்ரமணியர் தெற்கு நோக்கியும் அருள்பாளிக்கின்றனர். நடப்பாண்டு, நேற்று மாலை, 6:00 மணி அளவில் அனுக்ஞை விக்னேஷ்வர பூஜையுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. இன்று 13 ம் தேதி காலை பல்லக்கு, மாலை மயில் வாகனம், 14 ம் தேதி காலை பல்லக்கு, மாலை யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா  நடக்கிறது. வரும்  15 ம் தேதி காலை பல்லக்கு மாலை குதிரை வாகனம், 16 ம் தேதி காலை பல்லக்கு, மாலை  ரிஷப வாகனத்தில் சுவாமி உலா வருகிறார். 17 ம் தேதி காலை பல்லக்கு, மாலை ஆட்டுகிடா வாகனத்தில் சுப்ரமணியர் வேல் வாங்கும் நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 18 ம் தேதி இரவு 7:00 மணிக்கு மேல் 8:45 க்குள் ஸ்ரீ  வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 19 ம் தேதி திருக்கல்யாண ஊர்வலத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !