சபரிமலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் அதிகரிப்பு
சபரிமலை:சபரிமலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, என, கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் கூறினார். சன்னிதானத்தில் அவர் கூறியதாவது:இந்த ஆண்டு பக்தர்களுக்கு வசதிகள் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தரிசனத்துக்கு தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்காக ஏற்படுத்தப்பட்ட விர்ச்சுவல் கியூ என்ற ஆன்லைன் முன்பதிவு வசதியில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.பம்பை, சன்னிதானத்தை கழிவுகள் இல்லாத இடமாக மாற்ற 22.87 கோடி ரூபாய் செலவில் சீவேஜ் பிளான்ட் அமைக்கப்பட்டு அது செயல்பட தொடங்கியுள்ளது. குப்பைகளை எரிக்க மூன்று இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மரக்கூட்டம் முதல் சரங்குத்தி வரை ஆறு கியூ காம்ப்ளக்ஸ் அமைக்கப்பட்டுள்ளன. 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாளிகைப்புறம் கோயில் அருகில் 2.05 கோடி ரூபாய் செலவிலும், பம்பையில் 1.87 கோடி ரூபாய் செலவிலும் புதிய குளியலறை வளாகம் கட்டப்பட்டுள்ளன. பம்பையில் 1.45 கோடி ரூபாய் செலவில் புதிய பிரசாத தயாரிப்பு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. நிலக்கல்லில் 8.14 ரூபாய் கோடி செலவில் நடைப்பாதை, 14 மீட்டர் அகலத்தில் ரோடுகள், இண்டர்லாக் டைல்ஸ் பதித்த பார்க்கிங் கிரவுண்டு, பத்து லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 10 ஆயிரம் வாகனங்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். பம்பை முதல் சன்னிதானம் வரை பாதை சீரமைக்கப்பட்டு பக்தர்கள் இளைப்பாற ஷெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பை மணல் பரப்பில் இண்டர்லாக் டைல்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. அலோபதி, ஓமியோபதி, ஆயுர்வேதம் ஆகிய மூன்று மருத்துவ வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஒருங்கிணைந்த மருத்துவ வளாகம் பம்பையில் திறக்கப்பட்டுள்ளது. அப்பம் , அரவணை, அபிஷேக டிக்கெட்டுகள், தனலட்சுமி வங்கிகளில் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.