கோவை திருச்செந்தில் கோட்டத்தில் சூரசம்ஹாரம்
குறிச்சி: கோவை, ஈச்னாரியிலுள்ள திருச்செந்தில் கோட்டத்தில், 38ம் ஆண்டு கந்த சஷ்டி விழா முன்னிட்டு, சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. ஈச்சனாரியிலுள்ள திருச்செந்தில் கோட்டத்தில் (கச்சியப்பர் மடாலயம்), கந்த சஷ்டி விழா, 12ல் கணபதி வேள்வி, கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 13ல் பெண்கள் வழிபாடு மற்றும் திருவிளக்கு வழிபாடு நடந்தன. நேற்று காலை கணபதி வேள்வி, சடாட்சர ஹோமம், மகா அபிஷேகம் நடந்தன. மாலை, 4:30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. முதலில், சூரபத்மனிடம் சமாதானம் பேச, முருகர் வீரபாகுவை அனுப்புதல் நடந்தது. சமாதானத்தை ஏற்க மறுத்த சூரபத்மன், விநாயகர், சிங்கம், அரக்கன் உருவம் எடுத்து போர் புரிதல் நடந்தன. இறுதியாக, சூரபத்மனாக போருக்கு வந்தவரை, முருகர், வேலால் குத்தி, மா மரமாக மாற்றுகிறார். அம்மரம் இரண்டாக பிளந்து, சேவல் மற்றும் மயிலாக உருவம் எடுக்கிறது. சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் ஏற்றுக்கொள்வதுடன் சம்ஹாரம் நிறைவடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று திருக்கல்யாணம், அன்னதானமும், நாளை மஞ்சள் நீராட்டு மற்றும் உற்சவர் திருவீதி உலாவும் நடக்கின்றன. ஏற்பாடுகளை, மடாலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.