தி.மலையில் தீப திருவிழாவில் செல்பி எடுக்க தடை!
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவில், மகா தீபத்தன்று மலையில், மொபைல் போன் மூலம் பக்தர்கள் செல்பி எடுக்க போலீசார் தடை விதித்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி, வரும், 25ம் தேதி நடக்கிறது. அன்று, மாலை, 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். தீப திருவிழாவை காண, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். பக்தர்கள் பலர் மலை உச்சிக்குச் சென்று மஹா தீபம் ஏற்றுவதை காண்பர். மலை உச்சியில், 50 பேர் கூட நிற்க வசதி இல்லை. தொடர் மழையால் மலையில் பாசி படிந்து, வழுக்கும் நிலையில் உள்ளது. மஹா தீபத்தின் போது, மலை உச்சிக்கு செல்லும் பக்தர்கள், தங்கள் மொபைல்போனில் படம் எடுப்பதும், செல்பி எடுப்பதும் அதிகரித்துள்ளது. ஆர்வம் மிகுதியால், பாறை விளிம்புகளில் நின்று, செல்பி மற்றும் போட்டோ எடுக்கும் பக்தர்கள் அதன் ஆபத்தை உணர்வதில்லை. எனவே, இந்த ஆண்டு மலையேறும் பக்தர்கள் மஹா தீபம் ஏற்றப்படும் மலை உச்சி மற்றும் மலையில் உள்ள பாறை பகுதிகளில் நின்று, மொபைல் போனில் படம் எடுக்க போலீசார் தடை விதித்துள்ளனர். மீறி செயல்படுவோரை, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் கமாண்டோ வீரர்கள் மூலம் தடுத்து நிறுத்தவும், மொபைல் போன்களை பறிமுதல் செய்யவும் போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.