மின்ன தயாராகும் கார்த்திகை தீபங்கள்!
பொள்ளாச்சி: கார்த்திகை திருநாளை முன்னிட்டு, அகல் விளக்கு தயாரிக்கும் பணி பொள்ளாச்சியில் நடந்து வருகிறது. கிராமத்து வீடுகளில், இன்னமும் வியப்பை ஏற்படுத்தி வருகின்றன, மண்பாண்ட பொருட்கள். மண் பானை, விளக்கு, சிற்பங்கள் தயாரிப்பதில், மண்பாண்டக் கலைஞர்களின் கைவண்ணம் மெச்ச வைக்கும்; இது தான், இவர்களின் வாழ்வாதாரத்தையும் பூர்த்தி செய்து வருகிறது. நாகரிக மாற்றத்தை நோக்கி நகராத காலகட்டத்தில், குடிநீர், பொருட்கள் சேமித்து வைத்தல் உட்பட பல உபயோகங்களுக்கு, மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. கால மாற்றத்தில், இதுபோன்ற பொருட்கள், மெல்ல, மெல்ல, மறைந்து வருகின்றன. பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகள், மண்பாண்ட சமையல் மூலம் நீங்கும் என, மருத்துவத் துறையினர், இப்போதும் சொல்லி வருகின்றனர். எத்தகைய மாற்றம் வந்தாலும், பெ ாள்ளாச்சி ஆர்.பொன்னாபுரம், ஆனைமலை, வடக்கிப்பாளையம், பூசாரிப்பட்டி உட்பட பல பகுதிகளில், எளிதாக கிடைத்து வரும் களிமண்ணை பயன்படுத்தி, மண்பாண்ட பொருட்கள், உருவ பொம்மைகள், சாமி சிலைகள், தத்ரூபமாக வடிவமைக்கும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை தீபம், பொங்கல் பண்டிகை உட்பட விசேஷ நாட்களில், இப்பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும். தற்போது, கார்த்திகை தீபத்திருநாள் நெருங்குவதால், இத்தொழிலாளர்கள், விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் கூறுகையில், ‘கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, தீப விளக்குகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. சிறிய அளவிலான விளக்கு, ஒரு டஜன், 10 முதல், 12 ரூபாய், பெரிய அகல் விளக்கு, டஜன், 50 முதல், 75 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து, மழை பெய்து வருவதால், களி மண்ணால் தயாரிக்கப்படும் விளக்குகளை உலர வைப்பதில், சிக்கல் ஏற்படுகிறது; உற்பத்தியில், சற்று மந்தம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.