திருப்பூர் ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம்!
திருப்பூர்: திருப்பூர் ஐயப்பன் கோவிலில், நேற்று மாலை கொடியேற்று விழா நடைபெற்றது. திருப்பூர் காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை விழா, நவ., 18ல் துவங்கி, நடைபெற்று வருகிறது. தினமும் மாலை, 6:30 மணிக்கு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நேற்று மாலை, 6:30க்கு செண்டை மேளம் முழங்க, கொடியேற்று விழா நடைபெற்றது; தந்திரி கண்டரு மோகனரு கொடியேற்றினார். இன்று காலை, 10:30க்கு, நவ கலச அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம்; நாளை காலை, நவ கலச அபிஷேகம், இரவு, 7:30க்கு பகவதி சேவை; 3ம் தேதி காலை, நவ கலச அபிஷேகம், உற்சவ பலி பூஜையை தொடர்ந்து, இரவு, 7:00க்கு பறையெடுப்பு தாயம்பகை மேளம்; 4ம் தேதி காலை, நவ கலச அபிஷேகம், மாலை, 6:00க்கு பறையெடுப்பு மற்றும் இரவு, 9:00க்கு பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடக்கின்றன.
வரும், 5ம் தேதி காலை, 7:30க்கு ஐயப்பன் பவானிக்கு புறப்படுகிறார். அங்கு, சபரிமலை பிரதம தந்திரி மஹேஸ்வரரு, கண்டரு மோகனரு ஆகியோர் தலைமையில், ஆறாட்டு உற்சவம் நடக்கிறது. அன்று மதியம், 1:00க்கு, பவானியில் அன்னதானம். தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, விஸ்வேஸ்வரர் கோவில் முதல், ஐயப்பன் கோவில் வரை, மேள தாளம் முழங்க, யானை மீது அமர்ந்து, ஐயப்பன் ஊர்வலம் நடைபெறும். வரும், 26ம் தேதி வரை, தினமும் மாலை, வெவ்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 27ம் தேதி காலை, 10:00 மணிக்கு, மண்டல பூஜை நிறைவடைந்து, புஷ்ப அலங்காரம் நடக்கும். விழாவின் ஒருபகுதியாக, ஜன., 10 வரை, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம், அன்னதானம் வழங்கப்படும். ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட், ஐயப்பன் பக்த ஜன சங்கம் ஆகியன, விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றன.