உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா கோலாகலம்

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா கோலாகலம்

மதுராந்தகம் : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆடிப்பூரத்தையொட்டி, கஞ்சி வார்த்தல் மற்றும் பாலாபிஷேக விழா, நேற்று, கோலாகலமாக நடந்தது.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, கடந்த 31ம் தேதி துவங்கியது. அன்று அதிகாலை மங்கல இசையுடன், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. மாலை 6.10 மணிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமிபங்காரு அடிகளார், கலசவிளக்கு வேள்வி பூஜையை துவக்கி வைத்தார்.நேற்று காலை 6.45 மணிக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. கஞ்சி கலயத்துடன் வந்திருந்த பக்தர்கள், ஆதிபராசக்தி கல்லூரி விளையாட்டுத் திடலிலிருந்து, கோவில் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவிலுக்குள் காலை 7 மணிக்கு அனுமதிக்கப்பட்டனர். சுற்றுப்புற கிராமங்களுக்கு வாகனங்களில், கஞ்சி கொண்டு சென்று வழங்கினர். ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலையில், பங்காரு அடிகளார் பகல் 12.10 மணிக்கு, சுயம்புவிற்கு பாலாபிஷேகம் செய்தார். பக்தர்களுக்கு குடிநீர், உணவு, மோர், ஐஸ்கிரீம், பழங்கள் வழங்கப்பட்டன. இன்று, 2ம் தேதி மாலை வரை, பக்தர்கள் தொடர்ந்து பாலாபிஷேகம் செய்கின்றனர். மாலை 6 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறும்.விழாவையொட்டி, மேல்மருவத்தூருக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் பல்வேறு ஊர்களிலிருந்து இயக்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !