சபரிமலையில் டிச. 6 பாதுகாப்பு நடவடிக்கைகள்: தனி அதிகாரி பேட்டி!
சபரிமலை :சபரிமலையில் டிச.,6 பாதுகாப்பு நடவடிக்கைகள் ஐந்தாம் தேதி மதியம் முதல் ஏழாம் தேதி காலை வரை அமலில் இருக்கும் என்று சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி சுரேந்திரன் கூறினார்.சன்னிதானத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:டிச.,6 பாதுகாப்பு நடவடிக்கைள் நாளை மதியம் தொடங்கும். அனைத்து பக்தர்களும் முழு பரிசோதனைக்கு பின்னரே சன்னிதானத்தில் அனுமதிக்கப் படுவார்கள். எந்த பாதையில் வந்தாலும், மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாக மட்டுமே பக்தர்கள் செல்ல முடியும். நாளை இரவு நடை அடைத்த பின்னர் பக்தர்கள் 18-ம் படியேற முடியாது. ஆறாம் தேதி அதிகாலையில் நடை திறந்த பின்னர் மட்டுமே படியேற முடியும். பக்தர்கள் இருமுடி கட்டு மட்டுமே கொண்டு செல்ல முடியும். மொபைல் போன் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக் பொருட்களும் சன்னிதான திருமுற்றத்தில் பயன்படுத்தக் கூடாது. இங்கு இருமுடி கட்டை பக்தர்கள் பிரிக்க முடியாது. பக்தர்கள் மட்டுமல்ல அனைத்து ஊழியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தேங்காய் உடைப்பதற்காக வெட்டுக்கத்தி போன்ற பொருட்கள் எதுவும் இந்த நாட்களில் கொண்டுவரக்கூடாது. அடையாள அட்டை இல்லாத தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப் படுவார்கள். சன்னிதான திருமுற்றத்தில் உள்ள நெய் தோணியில் பக்தர்கள் நெய் தேங்காய் உடைக்க முடியாது. இதற்காக மாளிகைப்புறம் கோயில் செல்லும் பாதையில் தற்காலிக வசதி ஏற்படுத்தப்படும். கோயிலின் மேற்கு வாசல், மாளிகைப்புறம் மேம்பாலம் வழியாக சன்னிதான திருமுற்றத்தில் யாரும் செல்ல முடியாது. நெய்யபிஷேக பாத்திரங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தபடும். இந்த நாட்களில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி கோயிலை வலம் வர முடியாது. டிராக்டர் மற்றும் தலை சுமடுகளுக்கு கட்டுப்பாடு உண்டு. இவை பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும். ஐந்தாம் தேதி மதியம் முதல் ஏழாம் தேதி காலை ஒன்பது மணி வரை இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.