உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒற்றுமை விழாவாக குறிச்சி அரவான் திருவிழா

ஒற்றுமை விழாவாக குறிச்சி அரவான் திருவிழா

குறிச்சி: கோவை, குறிச்சியில், ௧௮ சமுதாய மக்கள் பங்கேற்கும் அரவான் திருவிழாவையொட்டி, நேற்று அரவான் – பொங்கியம்மன் திருமண விழா நடந்தது. மகாபாரதத்தில், கவுரவர்கள், பாண்டவர்கள் இடையே,  ௧௮ நாட்கள் நடக்கும் குருஷேத்திர போரின் துவக்கமாக,  ஆகம விதிகளின்படி, சுத்த வீரன் ஒருவரை பலி கொடுக்கும் நிகழ்ச்சியே, அரவான் திருவிழா.  பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன், போரை ஆரம்பித்தால் நடக்கும் பலன் குறித்து ஆராய்ந்தார். அப்போது, சுத்த வீரன் ஒருவனை பலி கொடுக்கவேண்டும் என்பது தெரியவந்தது. அதன்படி, அர்ஜுனனின் மகனான, ௩௨ லட்சணங்களுடன் காணப்படும் அரவானை பலி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. பலி கொடுக்கும் முன் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. மூன்று நாட்களில் மகளின் வாழ்க்கை முடியும் என்பதால், யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. நாயக்கர் சமூகத்தார், பாண்டவர்களின் நிலை உணர்ந்து, பெண் கொடுக்க முன் வந்தனர். திருமணம் முடிந்து, மூன்று நாட்களுக்கு பின், அரவான் களப்பலி கொடுக்கப்பட்டார்.

அக்காலத்தில், நாட்டில் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பல சமூகத்தார் பங்கேற்பர். அதுபோல, இதில், ௧௮ சமூகத்தார் பங்கேற்றனர். அதன்படி, இன்றும் இவ்விழா, ஒற்றுமை விழாவாக நடக்கிறது.இதற்காக, முதலில் அரவான் கோவில், சவளகுல வேளாளர் சேர்வைகாரர், காந்திஜி ரோடு, உடையார், தேவர் மற்றும் சுந்தராபுரத்தில் கவுண்டர், கோனாருக்கான மேடைகளில், அரவான் தங்குவார். அங்கிருந்து களப்பலி மேடைக்கு செல்லும் வழியில், பெருமாள் கோவில் முன், கிருஷ்ணர் அரவானுக்கு மாலை அணிவித்து, வாழ்த்து கூறி அனுப்பும் நிகழ்ச்சி, தேவர் சமூகத்தார் சார்பில் நடக்கும்.  அங்கிருந்து போயர், பிள்ளை மேடைகளுக்கு பின், தேவேந்திர குல வேளாளர் மேடையான, களப்பலி மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அரவான் பலி கொடுக்கப்படுவார். முன்னதாக, அவருக்கு பிடித்த பதார்த்தங்கள் படைக்கப்படும். இத்தகைய, ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக நடக்கும் இவ்விழாவில், அரவான் எழுந்தருளுதல், நேற்று காலை பெருமாள் கோவிலில் நடந்தது. தொடர்ந்து, குறிச்சி குளக்கரை வினாயகர் கோவிலில் தீர்த்தமாடி, சிறப்பு வழிபாட்டுடன் அரவான் புறப்படுதல் நடந்தது. மாலை, ௬:௦௦ மணிக்கு, அரவான் கோவிலில், பொங்கியம்மனுடன் திருமண விழா நடந்தது.  இன்று மதியம், அரவான் கோவிலில் நாதஸ்வர கச்சேரியுடன் இதர நிகழ்ச்சிகள் துவங்குகின்றன.மாலை, ௬:௦௦ மணிக்கு, குளக்கரை கற்பக வினாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.  நாளை காலை, ௭:௦௦ மணிக்கு, அரவான் திருவீதி உலா துவங்குகிறது. இரவு,  களப்பலி நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, அனைத்து சமூக பெரியதனகாரர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !