திருப்பரங்குன்றம் கோயிலில் டிச. 17ல் ஆருத்ரா தரிசன திருவிழா
ADDED :3794 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா, டிச., 17ல் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் துவங்குகிறது. டிச., 24 வரை தினமும் மாணிக்கவாசகர் கோயில் திருவாட்சி மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து எழுந்தருள்வார். ஓதுவாரால் திருவெண்பாவை 21 பாடல்கள் பாடப்படும். டிச., 25 காலை மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவலம் நடக்கும். இரவு கண்ணுாஞ்சல் முடிந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள் புறப்பாடாகி கோயில் முன் சிறிய ராட்டினத்தில் எழுந்தருளி ராட்டின திருவிழா நடக்கும். டிச., 26ல் அதிகாலை கோயில் மகா மண்டபத்தில் மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு தைலக் காப்பு சாத்துப்படியாகும். உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து, பூச்சப்பரங்களில் கிரிவலம் நடக்கும்.