உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை பெருவழிப்பாதையில் ஆய்வு: வசதிகள் செய்ய நடவடிக்கை

சபரிமலை பெருவழிப்பாதையில் ஆய்வு: வசதிகள் செய்ய நடவடிக்கை

சபரிமலை: எருமேலியில் இருந்து பம்பை வரும் பெருவழிப்பாதையில் தேவசம்போர்டு தலைவர் மற்றும் அதிகாரிகள் நடந்து சென்று ஆய்வு செய்து பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.எருமேலியில் இருந்து காளைகட்டி, அழுதை, கரிமலை, வலியானவட்டம் வழியாக பம்பை வரும் பெருவழிப்பாதை முழுக்க முழுக்க அடர்ந்த காட்டுக்குள் அமைந்துள்ளது. முன் காலத்தில் மகரவிளக்கு காலத்தில் மட்டுமே இந்த பாதையில் பக்தர்கள் வருவது வழக்கம். தற்போது மண்டல சீசனிலும் பக்தர்கள் வருகின்றனர். ஆனால் இந்த பாதையில் போதுமான வசதிகள் இல்லை என்று புகார் இருந்து வருகிறது.இதை தொடர்ந்து தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன், முதன்மை பொறியாளர் முரளிகிருஷ்ணன், நிர்வாக பொறியாளர் கிருஷ்ணகுமார், வனத்துறைகோட்ட அதிகாரி சந்தீப் மற்றும் அதிகாரிகள் 42 கி.மீ. துாரம் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.

இதன்படி அழுதை நதிக்கரையில் உயர்கோபுர விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆன்டோ ஆன்டணி எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2.40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். புதுசேரி என்ற இடத்தில் உள்ள மகாவிஷ்ணு கோயிலை புனரமைக்க உத்தரவிடப்பட்டது.கரிமலையில் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெறுகிறது. ஆனால் தண்ணீருக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்று அதன் நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து இங்கு வனத்துறைக்கு சொந்தமான டேங்கில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதி வாங்கி கொடுக்கப்பட்டது. மேலும் இங்கு பணிபுரியும் மூன்று தேவசம்போர்டு ஊழியர்கள் தங்குவதற்கு ஷெட் கட்ட அனுமதி பெறப்பட்டது.பல இடங்களிலும் இரவு வெளிச்சம் இல்லாதது பிரச்னை என்பது முக்கிய புகாராக தெரிவிக்கப்பட்டது. டீசல் இன்ஜின் மற்றும் சோலார் மூலம் விளக்குகள் அமைப்பது பற்றி ஆராய உத்தரவிடப்பட்டது.இந்த பாதையில் முடிந்த அளவு எல்லா இடங்களிலும் ஐயப்பா சேவா சங்கத்துடன் இணைந்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !