தாணுமாலைய சுவாமி கோயில் மார்கழி திருவிழா தொடக்கம்
நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களின் ஒன்று சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில். இங்கு மும்மூர்த்திகள் மூலவராக அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். 133 அடி உயர ராஜகோபுரமும், கோயில் அருகே அமைந்துள்ள தெப்பக்குளமும் இந்த கோயிலின் சிறப்புகளில் ஒன்றாகும்.இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாவான மார்கழி திருவிழா. நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக அதிகாலை நான்கு மணிக்கு நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடிமர சுவட்டில் பூஜைகள் நடத்திய பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.விழா தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கிறது. தினமும் தேவரா திருவாசகத்துடன் கூடிய பஜனை, சுவாமி வீதி உலா வருதல்,பஞ்சமூர்த்தி தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. 19-ம் தேதி மூன்றாம் நாள் விழாவில் இரவு 10.30-க்கு மக்கள்மார் சந்திப்பு, 25ல் தேரோட்டம், 26-ல் சப்தாவர்ணமும், ஆராட்டும் நடக்கிறது. கொடியேற்று விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.