உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆன்மிக தலங்களில் விழிப்புணர்வுக்கு ஏற்பாடு

ஆன்மிக தலங்களில் விழிப்புணர்வுக்கு ஏற்பாடு

கன்னிவாடி: ஆன்மிக தலங்களில் மர்மக்காய்ச்சல் விழிப்புணர்வு ஆலோசனை வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மர்மக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக சுகாதார விழிப்புணர்வு ஆலோசனைகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. அரையாண்டுத்தேர்வு பட்டியலை அரசு வெளியிட்டுள்ள சூழலில், பல பள்ளிகளில், அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். தேர்விற்கு தயாராகும் படலம் ஒருபுறம் இருந்தபோதும், அனைத்து பள்ளிகளிலும் சுகாதார ஆலோசனை முகாம்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதில் கை கழுவும் முறை, அவசியம், காய்ச்சல் பாதிப்பை தவிர்க்கும் வழிகள், பாதிப்படைந்தோரை பராமரிக்கும் முறைகள் குறித்து விளக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களைத்தொடர்ந்து, பொது இடங்களில் விழிப்புணர்வு ஆலோசனை பிளக்ஸ் போர்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள ஆன்மிக தலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து கோயில், சர்ச், மசூதிகளில் கூட்டுப் பிரார்த்தனைகளின்போது, நிகழ்ச்சியின் ஒரு அம்சமாக சுகாதார விழிப்புணர்வு ஆலோசனைகள், நிலவேம்பு கஷாயத்தின் அவசியத்தை வலியுறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !