திருத்தணி முருகன் கோவிலில் படித்திருவிழா!
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 31ம் தேதி, திருப்படி திருவிழாவும், ஜன., 1ம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் அமைக்கப்பட்டன. ஓராண்டிற்கு, 365 நாட்களை குறிக்கும் வகையில், படிகள் அமைக்கப்பட்டுள்ளதால், திருத்தணி முருகன் கோவிலில், டிச., 31ம் தேதி திருப்படி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. படித்திருவிழாவின் போது, கோவில் நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு படியிலும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. மேலும், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து, நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினர் இந்த மலைக்கோவிலுக்கு வந்து, பக்தி பாடல்களை பாடியவாறு, மலைக்கோவிலுக்கு நடந்து சென்று வழிபடுவர். இதுதவிர, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி வழிப்படுவர். காலை, 10:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவு, 12:01 மணிக்கு மூலவருக்கு சிறப்பு தீபாராதனை மற்றும், ஜனவரி, 1ம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து மூலவரை தரிசிப்பர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.