மீட்கப்பட்ட ஐயப்பன் சிலை கோவிலில் வைக்க கோரிக்கை
கரூர்: கரூர் அருகே, வேங்காம்பட்டியில் கடந்த ஜனவரியில், திருட்டுப்போய் மீட்கப்பட்ட ஐயப்பன் சிலையை, மீண்டும் கோவிலில் வைக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஐயப்ப பக்தர்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, கருப்பத்தூர் கிராமம், வேங்காம்பட்டியில் பிள்ளையார் கோவில் உள்ளது. மண்டப பகுதியில், ஐயப்பன் சிலையை வைத்து வழிபாடு செய்தோம். கடந்த, ஜன., 6ம் தேதி கோவிலில் இருந்த ஐயப்பன் சிலை திருடப்பட்டது. இதுகுறித்து லாலாப்பேட்டை போலிசில் புகார் செய்யப்பட்டது. ஐம்பொன் கலந்த ஐயப்பன் சிலை, ஜன., 18ம் தேதி பெட்டவாய்த்தலை அருகே வயல்காட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், தற்போது சிலை உள்ளது. சிலையை ஒப்படைக்கக் கோரி திருச்சி கலெக்டரிடம் சென்று கேட்டோம். கரூர் மாவட்ட எஸ்.பி., விசாரணை செய்து, விசாரணை அறிக்கையை தந்ததால், சிலை தருவதாக தெரிவித்தனர். கடந்த, நவ.,13ம் தேதி எஸ்.பி., அணுகி கேட்டபோது, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் எம்.ஹெச்., பிரிவில் தந்துவிட்டோம் என, தெரிவித்தனர். அந்த அறிக்கையை திருச்சி கலெக்டருக்கு அனுப்பி வைக்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால், விசாரணை அறிக்கை வரவில்லை என, எம்.ஹெச்., பிரிவினர் தெரிவித்தனர். தொடர்ந்து, நவ., 22ம் தேதி, எங்கள் முன்னிலையில் விசாரணை அறிக்கை எம்.ஹெச்., பிரிவில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், சிலை சம்பந்தமான பேப்பர் வரவில்லை என, வேண்டுமென்று அழைக்கழித்து வருகின்றனர். எனவே, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஐயப்பன் சிலையை மீட்டு, கோவிலில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.