ஆபத்தை உணராத ஐயப்ப பக்தர்கள்: ‘செல்பி’ ஆர்வத்தால் விதிமீறல்!
திருப்பூர்: ‘செல்பி’ ஆர்வத்தால், தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான செயல்களில் ஈடுபடும் ஐயப்ப பக்தர்களால், விபத்து ஏற்படுகிறது. சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் கார், சுற்றுலா வேன் மற்றும் பஸ்களில் வரும் ஐயப்ப பக்தர்கள், என்.எச்., 544 ரோட்டில், கோவை மார்க்கமாக செல்கின்றனர். செங்கப்பள்ளி வாளையார் செல்லும் இந்த ரோடு, நீலாம்பூர் வரை நான்கு வழி புறச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டில் வாகனங்கள் அதிவேகமாகச் செல்கின்றன. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், இந்த ரோட்டில் பல இடங்களில் வாகனத்தை நிறுத்தி இறங்கி, ஆசுவாசப்படுத்துகின்றனர். அச்சமயங்களில் சிலர், ரோட்டில், நின்று மொபைல் போனில் ‘செல்பி’ எடுக்கின்றனர்.
அவிநாசி பழங்கரை அருகே, நேற்று முன்தினம் ஒரு விபத்து நடந்து, 14 பேர் காயமடைந்தனர்; ஒருவர் உயிரிழந்தார். சில மாதத்துக்கு முன், அதே பகுதியில் நடந்த விபத்தில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். செங்கப்பள்ளி முதல் நீலாம்பூர் வரையிலான இந்த ரோட்டில், வழியில் உள்ள ஊர்களுக்கு பைபாஸ் ரோட்டில் இருந்து ரோடு பிரிந்து செல்கிறது.இதுபோன்ற பகுதிகளில், அதிவேகமாக வரும் வாகனங்கள், வேகத்தை குறைக்காமல் பிரிவு ரோட்டில் திருப்புவது வாடிக்கையாக உள்ளது. ‘செல்பி’ எடுக்கும் ஐயப்ப பக்தர்கள், இதுபோன்ற பிரிவு ரோடுகளில் நிற்பதால், பெரும் ஆபத்தாக அமைகிறது. வெளியூரில் இருந்து வருவோர், ஆபத்தை உணராமல் விளையாட்டுத் தனமாக செயல்படுகின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வை, இந்த ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கும், பயணிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும்.