ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு போதிய வசதி செய்ய முடிவு
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்ய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன., 15ல் யாக பூஜைகளுடன் துவங்குகிறது. ஜன., 20ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா தொடர்பான அனைத்து துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் ராமநாதபுரத்தில் நடந்தது. எஸ்.பி., மணிவண்ணன் முன்னிலை வகித்தார். இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பலப்படுத்தப்படும். குடிநீர், சுகாதாரம், கழிப்பிட வசதி செய்யப்படும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள், சென்னையில் இருந்து ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் நந்தகுமார் கூறினார். டி.ஆர்.ஓ., அலி அக்பர், கோயில் இணை ஆணையர் செல்வராஜ், ஏ.எஸ்.பி., சர்வேஸ்ராஜ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பழனி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) காமாட்சி கணேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.