உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதமங்கலம் புதூரில் மஞ்சு விரட்டு: ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

ஆதமங்கலம் புதூரில் மஞ்சு விரட்டு: ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

திருவண்ணாமலை: ஆதமங்கலம் புதூர் கிராமத்தில், இரண்டாவது நாளாக நடந்த மஞ்சு விரட்டு விழாவைக் காண, ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஆதமங்கலம் புதூர், வீரளூர், மேல்சோழங்குப்பம், கீழ்பாலூர் ஆகிய நான்கு கிராமங்களில், நீதி மன்ற தடை உத்தரவை மீறி, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் மஞ்சு விரட்டு விழா நடத்தப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காணும் பொங்கலை முன்னிட்டு, இரண்டாவது நாளாக ஆதமங்கலம் புதூர் கிராமத்தில், நேற்று மாலை, 4.30 முதல், 6.30 மணிவரை, மஞ்சு விரட்டு நடந்தது. இதில், 57 காளைகள் பங்கேற்றன. மஞ்சு விரட்டு விழாவில், இரு கோஷ்டிகளாக செயல்பட்டு, காளைகளை மாறி, மாறி விட்டு, விழாவை பரபரப்பாக்கினர். இதனால், 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, போட்டி போட்டு காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த நகை, பணம், பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களை தட்டிச் சென்றனர். மஞ்சு விரட்டைக் காண அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். எந்தவித அசம்பாவிதமும் இன்றி, மஞ்சு விரட்டு விழா அமைதியாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !