30 ஆண்டுக்கு பின் கோலாகலம்: சவுடேஸ்வரி அம்மனுக்கு விழா
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஜேடர்பாளையம் ஊராட்சியில், 30 ஆண்டுக்கு பின் சவுடேஸ்வரி அம்மனுக்கு விழா நடந்தது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஜேடர்பாளையம் ஊராட்சி, ஓ.ஜேடர்பாளையம் கிராமத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தை மாதம் முதல் மூன்று நாட்கள் விழா நடப்பது வழக்கம். விழா தொடங்கியதும், கோவிலுக்கு சம்பந்தப்பட்ட, 200 குடும்பங்கள் வீட்டிலும் சமையல் செய்ய மாட்டார்கள். கோவில் சார்பிலேயே அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். கடந்த, 30 ஆண்டுக்கு பின், இப்போது தான் இக்கோவில் விழா நடக்கிறது. கடந்த, 15ம் தேதி தொடங்கிய விழாவில் முதல் நிகழ்ச்சியாக வீரக்குமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் சாமுண்டி அழைப்பு, மாலை, 4 மணிக்கு ஜோதி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா, சத்தாபரணம் நிகழ்ச்சியுடன் வீரக்குமாரர்கள் ஊர்வலமாக வந்தனர். இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: இவ்விழாவை நடத்த, 15 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். கடந்த, 30 ஆண்டாக தொழில் நலிவு காரணமாக விழாவை நடத்த முடியவில்லை. ஆனால், இந்தாண்டு சிரமப்பட்டு இவ்விழாவை நடத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.