வள்ளலார் வாழ்வினிலே...!
வள்ளலாரின் இளமைக்கால பெயர் ராமலிங்கம். அவருக்கு அவரது அண்ணன் சபாபதி பாடம் கற்றுக் கொடுத்தார். படிப்பில் ஆர்வமில்லாத ராமலிங்கம், அடிக்கடி கந்தகோட்டம் முருகன் கோவிலுக்குச் சென்று விடுவார். பள்ளியில் சேர்த்தால் நண்பர்களோடு சேர்ந்து படிக்க வாய்ப்பிருக்கும் என எண்ணிய அண்ணன், ராமலிங்கத்தை சென்னை பச்சையப்பன் பாடசாலையில் சேர்த்தார். அங்கு ஆசிரியர், ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்னும் உலகநீதிப் பாடலை நடத்தினார். இதைக் கேட்ட ராமலிங்கம், இதென்ன.... பாட்டின் ஆரம்பமே ஓதாமல் என்று எதிர்மறையாக இருக்கிறதே? என்றார். பாடத்தில் ஆர்வம் இல்லாமல் எதிர்வாதம் பேசுகிறாயா? உனக்கு தெரிந்தால் பாடு பார்ப்போம் என்று கோபத்தில்
கத்தினார் ஆசிரியர். ராமலிங்கமும் இனிய குரலில், ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் என்று துவங்கும் இனிய பாடலைப் பாடினார். வியந்து போன ஆசிரியர், இது யார் எழுதிய பாட்டு? என்று கேட்டார். நான் எழுதியது தான் என்றார் ராமலிங்கம் மிகுந்த பணிவுடன். கருவிலேயே தெய்வ அருள் பெற்ற குழந்தை இவர் என்பதை ஆசிரியர் உணர்ந்து கொண்டு வாழ்த்தினார். (மகான் வள்ளலார்)