உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டு விடு!

கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டு விடு!

*கருணை மிக்க கந்தப்பெருமானின் திருவடிகளைச் சரணடையுங்கள். அவனுக்கு நாம் சொந்தமாகி விட்டால் அவனது அருள் நம் சந்ததிக்கே வந்து சேரும்.
*குடும்பத்தில் அனைவரும் ஒன்று கூடி காலை அல்லது மாலையில் விளக்கேற்றி முருகப்பெருமானை வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும்.
*காலையில் நீராடும் போது தண்ணீரை சிவகங்கை தீர்த்தமாக எண்ணி வணங்க வேண்டும். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான சரவணபவ என சொல்லிக்கொண்டே நீராட வேண்டும்.
*தினமும் தூய ஆடைகளை உடுத்திக் கொண்டு, முருகனுக்குரிய திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, கந்தரனுபூதி போன்ற முருகன் துதிப்பாடல்களை பக்தியுடன் படிப்பது மனதிற்கு நல்லது.
*புதிய மலர்களால் முருகப்பெருமானை அர்ச்சித்து வணங்க வேண்டும். அவரது திருவடியை சிந்தித்தபடியே சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும்.
*கடவுளை நினைக்கின்ற நேரமே நம்முடைய நேரம். தர்மத்திற்காக செலவழித்த பணமே நம்முடைய பணம். மற்றதெல்லாம் வீணாகச் செலவழிந்ததே.
*கண்ணுக்குத் தெரியும் இந்த உலகத்திற்கு சேவை செய்வது போல, கண்ணுக்குப் புலப்படாத கடவுளுக்கும் சேவை செய்வது நம் கடமை.
*மனிதனையும், விலங்கையும் பிரிக்கும் எல்லைக் கல் ஒன்று இருக்கிறது. அதுவே பக்தி. அது இல்லாவிட்டால் நமக்கு சிறந்த அறிவிருந்தாலும் அது வேலை செய்யாது.
*கடவுள் நமக்கு செய்வது அத்தனையும் அருள் மட்டுமே. சில நேரத்தில் சோதனை, துன்பம் போல நம்
மனதில் தோன்றலாம். அதுவும் கூட அறியாமையே ஆகும்.
*மனம், மொழி, வாக்கு ஆகியவற்றால் செய்யும் குற்றத்தையும் கடவுள் நன்றாக அறிவார். சர்வ வல்லமை படைத்த அவர் மீது நமக்கு பயம் இருக்க வேண்டும். அதே சமயத்தில் பக்தி என்னும் வலையால் அவரைக் கட்டி விட முடியும்.
*தீப்பந்தம் கீழ்நோக்கி இருந்தாலும், அதன் சுடர் மேல்நோக்கியே நிற்கும். அதுபோல வறுமை அடைந்தாலும், உயர்ந்த மனிதர்கள் நல்லதையே சிந்திப்பார்கள்.
*எந்தப் பாவம் செய்தாலும் தெய்வத்திடம் மன்னிப்பு உண்டு. ஆனால், நன்றி மறந்த பாவத்தை எந்த தெய்வமும் மன்னிப்பதில்லை.
*பிறரது உழைப்பில் நெய்யும், பாலும் உண்பதை விட, சுயமுயற்சியில் கிடைத்த தண்ணீரும் சோறும் மதிப்பு மிக்கது.
*இரவு நேரத்திற்கு தேவையான பொருளை பகலிலேயே தேடுவது போல முதுமைக் காலத்திற்கு தேவையானதை இளமையிலேயே தேடிப் பெற வேண்டும்.
*உண்மையை மட்டும் பேசுங்கள். தர்ம வழியில் வாழ்வு நடத்துங்கள். பெற்றோர், குரு, சான்றோரை மதியுங்கள். இவையே நல்லவர்களின் பண்புகள்.  (மகான் வாரியார்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !