உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை கிராமத்தில் முயல் விடும் வினோத திருவிழா

தி.மலை கிராமத்தில் முயல் விடும் வினோத திருவிழா

திருவண்ணாமலை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருகே, முயல் விடும் வினோத திருவிழா நடந்தது. முயல் யாரிடமும் சிக்காமல் ஓடி விட்டதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, நல்லூர் கிராமத்தில், பொங்கல் விழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் நரி விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த, மூன்று ஆண்டுகளாக குள்ள நரி கிடைக்காததால், அதை முயல் விடும் விழாவாக மாற்றினர். விழாவில், ஓடும் முயலை யார் பிடிக்கிறார்களோ, அவர்கள் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்த்தால், குடும்பம் சுபிட்சமாக, நோயின்றி இருக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம் இந்த கிராமத்தில் முயல் விடும் விழா நடந்தது. முயல் கழுத்தில் மாலை அணிவித்து, டிராக்டரில் ஊர்வலமாக திரவுபதி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தைகளுக்கு நோய் வரக்கூடாது என்பதற்காக, முயலை குழந்தைகளின் தலையில் வைத்து, ஆசி பெறும் நிகழ்ச்சி நடந்தது. பின், கோவில் முன்பு கட்டப்பட்டிருந்த வாழை மரத்தை பூசாரி, இரண்டாக வெட்டினார். வாழை மரத்தை போட்டி போட்டு கிராம மக்கள் வீட்டிற்கு எடுத்து சென்றனர். இதை வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பின் கோவிலில் இருந்து முயலை ஊர்வலமாக கொண்டு சென்று, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஓட விட்டனர். அதை பிடிக்க மக்கள் ஓடினர். ஆனால் முயல் யார் கையிலும் சிக்காமல், கரும்பு தோட்டத்தில் புகுந்து சென்று விட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். விழாவில், பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ்வரி ராஜேந்திரன், திரவுபதி அம்மன் கோவில் அறங்காவல் குழு தலைவர் கருணாகர ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !