குகை மாரியம்மன் கோவிலில் வண்டி வேடிக்கை கோலாகலம்
சேலம்: சேலம் குகை மாரியம்மன் காளியம்மன் கோவிலில், நேற்று நடந்த வண்டி வேடிக்கையை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து ரசித்தனர். சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை, ஜூலை 26ல் பூச்சாட்டுதலுடன் துவங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. இதில், ஜூலை 30ல் காளியம்மன், மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று மாலை, பிரசித்தி பெற்ற வண்டிவேடிக்கை நடந்தது. இந்த வண்டி வேடிக்கையில், தெய்வ உருவங்களாக வேடம் அணிந்தவர்கள், புராண, தெய்வீக கதைகளை சித்தரிக்கும் சம்பவங்கள், கம்ப்யூட்டர் கால நவீன காலாச்சாரம் அடங்கிய நிகழ்வுகள் என, அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில், வலம் வந்தனர். நேற்று மாலை 4 மணிக்கு துவங்கி நள்ளிரவு வரை வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. கடந்த ஆண்டு, 80 வண்டிகள் கலந்து கொண்டன. நேற்று நடந்த வண்டி வேடிக்கையில், நூற்றுக்கும் மேற்பட்ட வண்டிகள் கலந்து கொண்டன. கலந்து கொண்ட வண்டிகளுக்கு பரிசும், சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வண்டிகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. வண்டி வேடிக்கையை முன்னிட்டு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வண்டிகை வேடிக்கை முன்னிட்டு, மாலை 3 மணி முதல் இரவு வரை, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி ரோட்டில் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.