பழநி பக்தர்கள் நடைபாதை மாயம்
பழநி: பழநி -திண்டுக்கல் ரோடு ஒட்டன்சத்திரம் முதல் பழநி வரை தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை பக்தர்களின் நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.தைப்பூச விழாவுக்காக பழநிக்கு வெளிமாவட்ட பாதயாத்திரை பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் வசதிக்காக, விபத்தை தடுக்கும் வகையில் ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி என பழநி வரை ரோட்டோரம் தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரை பக்தர்கள் பயன்படுத்தும் இந்த பாதையை முழுமையாக ஆக்கிரமித்து பல இடங்களில் ஓட்டல்கள், பழக்கடைகள், டீ கடை என கூடாரங்களுடன் நிறைய ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளன. இதனால் பக்தர்கள் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. ரோட்டில் இறங்கி நடக்கின்றனர்.வரும் நாட்களில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் ரோட்டில் நடக்கும் பக்தர்களுக்கு இரவு நேரத்தில் விபத்து அபாயம் உள்ளது. ஆகையால் ஒட்டன்சத்திரம்- -பழநி வரை நடைபாதையில் குப்பை மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதயாத்திரை பக்தர்களுக்கு நெடுஞ்சாலை பகுதியில் இலவச குடிநீர், குளியல், கழிப்பறை வசதிகள் செய்துதர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.