தைப்பூசம்: பழநியில் ஆளில்லா விமானம் மூலம் மலைக்கோயில் கண்காணிப்பு!
பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயில் ஆளில்லா விமானம் மூலம் இன்று முதல் கண்காணிக்கப்படுகிறது. பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய முக்கிய ரோடுகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன.நாளை தைப்பூசத்தை முன்னிட்டு, பழநி கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வது, சுவாமி தரிசன வழியில் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க படிப்பாதை, யானைப்பாதை ஒரு வழிப் பாதைகளாக இன்றுமுதல் மாற்றப்படுகின்றன.
மலைக்கோயிலுக்குச் செல்ல யானைப்பாதையையும், அடிவாரத்திற்கு இறங்கி வர படிப்பாதையும் பக்தர்கள் பயன்படுத்தலாம்.மலைக்கோயில்,வின்ச் ஸ்டேஷன் பகுதிகளில் முதலுதவி சிகிச்சை மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக நினைவரங்கு நுழைவாயில் பகுதியில், ஆறுவழி தடுப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 5 பாதைகளில் பக்தர்களும், ஒரு பாதை போலீசாரின் கண்காணிப்பிற்கும் பயன்படுத்தப்பட உள்ளது. வின்ச், படிப்பாதை, யானைப்பாதை, குடமுழுக்கு வழிப்பாதைகளில் கண்காணிப்பு கருவிகள் (மெட்டல் டிடெக்டர்கள்) மற்றும் மலைக்கோயில் மற்றும் பாதவிநாயகர் கோயில் அருகே கேமராக்கள், மானிட்டர் மூலம் பக்தர்கள் கண்காணிக்கப் படுகின்றனர்.
பாதுகாப்பு: தைப்பூச விழாவிற்காக மதுரை மண்டல ஐ.ஜி., முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. போக்குவரத்து நெரிசல், கேமரா கண்காணிப்பு, குற்றச்சம்பவங்களை தடுக்க வலியுறுத்தியுள்ளார். அதன்படி திருச்சி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் எஸ்.பி., டி.எஸ்.பி.,கள், உட்பட 3,000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக வந்து குவிந்துள்ளனர். இதைத் தவிர தனியார்செக்யூரிட்டி சர்வீஸ், ஊர்க்காவல் படையினர், என்.எஸ்.எஸ்., என்.சி.சி, மாணவர்கள், போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.
ஆளில்லா குட்டிவிமானம்: பழநி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில்,“ கிரிவீதி, மலைக்கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 20 நிமிடங்கள் வரை படம் பிடிக்கும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க உள்ளோம். சென்னையை சேர்ந்த குழுவினர் இதற்காக ஆய்வு செய்கின்றனர். ஒட்டன்சத்திரம் வரை இன்றுமுதல் ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது. அனுமதிச்சீட்டு உள்ள சரக்கு வாகனங்கள், கார்கள் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுகிறது” என்றார்.