மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா: கிரேனில் அலகு குத்தி வந்த இளைஞர்கள்
ஈரோடு: ஈரோடு சின்னசேமூர், பெரியசேமூர் மகாமரியம்மன் கோவில் பண்டிகையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த எல்லப்பாளையம் சாலையில் அமைந்துள்ள சின்னசேமூர், பெரியசேமூர் பகுதிகளில் மகா மாரியம்மன் கோவில்கள் உள்ளன. கடந்த டிச. 26ம் தேதி, பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. சின்னசேமூர், பெரியசேமூர், தண்ணீர்பந்தல்பாளையம், எல்லப்பாளையம், கொங்கம்பாளையம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்றி வழிபட்டனர். கடந்த, 2ம் தேதி பால்குடம் தீர்த்தம் ஊர்வலம் நடந்தது. நேற்று பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல் அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. வேண்டுதல் வைத்த பக்தர்கள் ஏராளமானோர், வேல் அலகு, கத்தி அலகு, மயில் அலகு, நாக்கு அலகு, குத்தி ஊர்வலமாக வந்தனர். பெண்கள் சிலர் அம்மன் படத்தை வைத்த சிறிய தேரை முதுகில் அலகு குத்தி இழுத்து வந்தனர். இளைஞர்கள் பலர் ராட்சத கிரேனில் பறந்தபடி பறவை, விமானம் அலகு என பக்தி பரவசமாக பறந்து வந்தனர். கனிராவுத்தார் குளம் அருகே புறப்பட்ட அலகு ஊர்வலம் மதியம், 12 மணிக்கு கோவிலை அடைந்தது. வழிநெடுகிலும் பெண்கள், மஞ்சள் நீர் ஊற்றி, ஓம் சக்தி, பராசக்தி, என கோஷமிட்டனர்.