வள்ளியூர் இசக்கியம்மன் கோயிலில் 18ம் தேதி கொடை விழா துவக்கம்
வள்ளியூர் : வள்ளியூர் இசக்கியம்மன் கோயிலில் ஆவணி கொடைவிழா வரும் 18ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.வள்ளியூர் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள இசக்கியம்மன் கோயில் கொடைவிழா ஆண்டுதோறும் ஆவணி முதல் வெள்ளிக்கிழமை நடக்கும். அதன்படி இந்தாண்டிற்கான ஆவணி பெருங்கொடைவிழா வரும் 18ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக 18ம் தேதி காலையில் 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்ஸ்வர பூஜை, புண்ணியவாகனம், பஞ்சகவ்ய பூஜை, கும்ப பூஜை ஆகியன நடக்கிறது.காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், ஸ்ரீதேவி சாணத்திய ஹோமம், ருத்ர ஹோமம், அஷ்டோத்திர சங்கு பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை பூஜைகள் நடக்கிறது. காலை 8 மணிக்கு மகா அபிஷேகம், சங்காபிஷேகம், கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை பூஜை நடக்கிறது. மாலை 7 மணிக்கு கும்பம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.இரண்டாம் நாள் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. பின் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு முருகன் கோயில் சரவண பொய்கையில் இருந்து அம்மனுக்கு தீர்த்தம் எடுத்து வந்து மோட்டார் அணிவகுப்பு ஊர்வலம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜை நடக்கிறது. சாமி மயானம் சென்று வந்து சாமபடைப்பு பூஜை நடக்கிறது.மூன்றாம் நாள் காலையில் சிறப்பு பூஜையோடு கொடைவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியினருடன் ஆட்டோ, டூரிஸ்ட் கார், டாக்ஸி, வேன் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள், விழாக்குழு தலைவர் விஜிவேலாயுதம், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.