காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஒத்திவைப்பு
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருப்பணி நிறைவு பெறாததை முன்னிட்டு, இந்த ஆண்டு திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி கடைசி செவ்வாய் காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்கும். 40 நாட்கள் நடைபெறும். சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி, விரதமிருந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் சிறப்புடையது. இதன் கும்பாபிஷேக பணி ஸ்ரீலலிதா முத்துமாரியம்மன் அறக்கட்டளை சார்பில், கடந்த 2013 ஆகஸ்டில் தொடங்கப்பட்டது. 10 ஆயிரத்து 500 சதுர அடியில் சுற்று பிரகார மண்டபம், தங்க தகடு பதிக்கப்பட்ட கொடிமரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அன்னதான மண்டபம், 5 நிலை கொண்ட 56 அடி உயர ராஜகோபுர பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மூலஸ்தான விமானம் புதுப்பித்தல் பணிக்காக,நவ.23-ல் சிவகங்கை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் பாலாலயம் நடந்தது. இரண்டரை மாதங்கள் கடந்த நிலையிலும், விமானம் புதுப்பித்தலுக்கான ஆணையை, இந்து சமய அறநிலைத்துறை வழங்காததால், பணிகள் தொடங்கப்படவில்லை. கும்பாபிஷேக பணி நிறைவு பெறாததால், இந்த ஆண்டு மாசி - பங்குனி (மார்ச் - ஏப்ரல்) விழா நடத்த முடியாத நிலை, கோயில் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.செயல் அலுவலர் பாலதண்டாயுதத்திடம் கேட்டபோது: ஆகம விதிப்படி பாலாலயம் நடத்திய பிறகு, கும்பாபிஷேகம் நடத்தாமல் திருவிழாவை நடத்த முடியாது. 100 ஆண்டு பழமையான கோயில்களை இடிப்பது குறித்த வழக்கு கோர்ட்டில் உள்ளதால், இந்த கோயிலின் பழமை குறித்த தகவல்களை, இந்து சமய அறநிலையத்துறை கோரியிருந்தது. 1956ம் ஆண்டு உருவான கோயில் என்பதால், பழமையான கோயில் பட்டியலில் முத்துமாரியம்மன் கோயில் வராது, என்பதை ஆணையருக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். பாலாலயம் அனுமதி பெற்றுத்தான் நடத்தப்பட்டுள்ளது.விமான சீரமைப்பு பணிக்குரிய அனுமதி கிடைத்தவுடன்,பணிகள் விரைந்து நடத்தப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிந்த உடனே திருவிழா நடத்த முடியாது. அடுத்த ஆண்டு வழக்கம் போல திருவிழாவை நடத்தலாம், என்றார்.